தமிழகத்தில் திமுக சரியாக ஆட்சி நடத்தவில்லை என்று கோவை திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கார்த்திக். இவர் கடந்த 2016, 2021 வரையில் கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஆவார். இந்த முறை நடந்த தேர்தலிலும் போட்டியிட்டார் ஆனால் தோல்வியை சந்தித்தார்.
அதன் பின்னர் தனது மனைவிக்கு கோவை மாநகர் மேயர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். அதிலும் செந்தில் பாலாஜி மண் அள்ளிப்போட்டார் என்ற பேச்சு எழுந்தது.
இதனால் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த கார்த்திக் தற்போது ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது: ஒரு வீட்டுக்கு, 10 வாசல் இருக்கக் கூடாது, அரசியலில் முதல்வர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பவராக இருக்க வேண்டும். ஜெயலலிதா இருக்கும்போது, ஜெயலலிதா, சசிகலா இருவரும் முடிவெடுப்பர். ஆனால் மூன்றாவது ஆள் யாரும் தலையிட முடியாது.
ஆனால் திமுகவில் அப்படி இல்லை, அண்ணாநகர் கார்த்திக் இருக்கிறாரே.. அவருடைய வீட்டில் காலை 300 பேர் கீழே இருப்பார்கள். இவர் உடற்பயிற்சி செய்து முடித்து வரும் வரையில் காத்திருப்பார்கள்.
டெண்டர் விஷயம் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் பேசுவதற்கு அனுமதிப்பார். அதன் பின்னர் தான் கீழே இறங்கி வருவாரு.. அவர் ஒரு பவர் சென்டர்.
மகேஷ் பொய்யாமொழி திருச்சியிலேயே எங்கே தங்கியிருப்பார்னு தெரியாதுன்னு அங்கு உள்ள கட்சிக்காரர்களே சொல்றான். நேருவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இவரை பார்க்க முடியாது. இது எல்லாத்தையும் சரி செய்ய வேண்டும். பொதுமக்கள் அனைத்தையும் கவனித்து வருகின்றனர்.
இவை அனைத்தையும் சரி செய்யனும்.. நடக்கிற எல்லா விஷயத்தையும் மக்கள் கவனித்து வருகின்றனர். கோவையில் திமுக வலிமையா இருக்குன்னா எனக்கே மேயர் பதவி வேண்டாம்.. ஆனால் திறமையானவர்கள் இருந்திருந்தால், ஆண் மேயரிடம் கொடுத்திருக்க வேண்டும்.
அப்ப தான் கட்சி நிக்கும். கட்சியை அப்பதான் டெவலப் பண்ண முடியும். கோவையில் 10 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்விக்கு பெண் மேயர் பதில் சொல்ல முடியுமா. நாங்கள் உடனிருந்தாலும் பேச முடியாது. பேசினால் நீங்கள் யார் மேயரா என்ற கேள்வி வரும். என்னதான் நாங்கள் பக்கத்தில் இருந்தாலும் பேச முடியாது. இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சருக்கு அதிகாரம் செய்யத்தெரியல என்று ஒரு மாவட்ட செயலாளரே பேசியிருப்பது அக்கட்சியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.