தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர்கள் திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. அப்போது வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் விவகாரம் பற்றி நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
மேல்முறையீட்டு குழு தேர்தல் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று (ஜூலை 27) நடந்தது. இதில் 9 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக திமுக சார்பில் 9 பேர் கொண்ட பட்டியல் மாவட்ட தலைமையால் வெளியிடப்பட்டது.
ஆனால் பட்டியலில் இடம் பெறாத 3 திமுக கவுன்சிலர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 9 பேர் கொண்ட குழு உறுப்பினருக்கு 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் திமுக அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 3 பேரும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
மாநகராட்சி கூட்டம் பரபரப்பாக தேர்தல் நடந்து முடிந்த பின்னர், மாநகராட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி எழுந்து மேயர் பி.எம்.சரவணன், திமுக மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் உள்ளிட்டோரை குற்றம்சாட்டி பேச ஆரம்பித்தார். அப்போது அவர், மாநகராட்சியின் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு வேட்பாளர்கள் அறிவிப்பு பற்றி மேயர் அழைப்பின் பேரில் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு சென்றபோது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
கவுன்சிலர் ஆகிய எங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று கூறினார். அதனை தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசில்லா, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர்கள் கோகுலவாணி, அனார்க்கலி உள்ளிட்டோரும் தர்ணாவில் ஈடுபட்டு திமுக மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மேயருக்கு எதிரா கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் கூட்ட அரங்கம் போர்க்களத்தை போன்று காட்சி அளித்தது.
அப்போது குறுக்கிட்ட ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி வார்டு பற்றிய கோரிக்கைகளை மட்டும் இங்கு பேசுங்கள். அரசியல் பிரச்னையை வெளியில் இங்கு பேசக்கூடாது. வெளியே சென்று பேசுங்கள் என்றார். இதனால் பாதியிலேயே மேயர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அதனை தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே இருக்கிறது என்று கவுன்சிலர்கள் புலம்பியவாறு கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பல பிரச்னைகள் எழுகிறது. இதனை பற்றி எல்லாம் கனிமொழி பேச மாட்டார். அவருக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் எதாவது ஒரு சம்பவம் நடந்து விட்டால் உடனடியாக மெழுகுவர்த்தியை கையில் ஏந்த சென்று விடுவார். சொந்தக் கட்சி பெண் கவுன்சிலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு எல்லாம் கனிமொழி குரல் கொடுக்கலாமே.
-வ.தங்கவேல்