திமுக யாத்திரை நடத்தினால் ‘என் மகன், என் பேரன்’ என சொல்வார்கள்: மானாமதுரையில் தலைவர் அண்ணாமலை பேச்சு!

திமுகவினர் யாத்திரை நடத்தினால் என் மகன், என் பேரன் என சொல்வார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட என் மண் என் மக்கள் யாத்திரை 5ம் நாளாக இன்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடைந்தது. அப்போது அவர் மானாமதுரை மண்பாண்ட தொழில் கூடத்தில் மண்பாண்டங்களை செய்து பார்த்தார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து அவர் மானாமதுரையில் புகழ்பெற்ற கடம் இசைக்கருவியை இசைத்துப் பார்த்தார்.

அதனை தொடர்ந்து அவர் திறந்தவேனில் நின்று உரையாற்றியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அதே நேரத்தில் மத்தியில் பிரதமர் மோடி 3வது முறையாக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியில் அமர வேண்டியது கட்டாயம். இதனால் அவர் இந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனைகளை என் மண், என் மக்கள் யாத்திரை மூலமாக தமிழகம் முழுவதும் மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம்.

மேலும் திமுகவினர் யாத்திரை நடத்தினால் ‘என் மகன், என் பேரன்’ என்று சொல்லியிருப்பார்கள். இதை நாம் கடந்த 27 மாதங்களாக பார்த்து கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் ஸ்டாலின் அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சி நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் இன்னும் அதிகமாக வேண்டும் என திமுக நினைக்கிறது. மானாமதுரையில் பானை செய்கின்ற தொழில் புகழ் பெற்றது. திருக்குறள் நூல் பிரதமருக்கு பிடித்தமானது. இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: இன்றைய என் மண் என் மக்கள் பயணத்தில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியின் சாட்சியாக, பெரும் ஆரவாரத்துடன் கூடியிருந்த மக்களிடையே பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

மானாமதுரை மண், தனிச் சிறப்பு வாய்ந்த மண். இங்குள்ள மண்ணால் செய்யப்படும் பானைகள் உலகப் புகழ் பெற்றவை. இந்தப் பகுதியிலிருக்கும் கீழடியில், 2600 ஆண்டு காலப் பழமையான மண்பானை ஓடுகள் கிடைத்தது, மானாமதுரையின் தொன்மைக்குச் சான்று.

மானாமதுரை சுற்றுவட்டார தொழில் வளர்ச்சிக்காக, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் கொண்டு வரப்பட்ட சிப்காட், இன்று மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், திமுக அரசுக்கு மானாமதுரை சிப்காட் பற்றியோ, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பற்றியோ எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. டாஸ்மாக் வருமானம் மட்டும்தான் திமுகவுக்குத் தேவை.

இத்தனை ஆண்டு காலம் பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக, மத்திய அரசு ஒதுக்கும் பெரும் நிதியைச் செலவிடாமல் திருப்பி அனுப்பிய ஊழல் திமுக அரசு, தற்போது, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் பட்டியல் சமுதாய மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்ற முயற்சிக்கிறது. பட்டியல் சமூக மக்களுக்கான நிதியை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. எப்படியும் யாராவது எதிர்த்து வழக்கு தொடுப்பார்கள், அதை வைத்தே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் கைவிட்டு விடலாம் என்ற எண்ணத்தோடு திமுக செயல்படுகிறது.

இது வரை இல்லாத அளவில், தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எண்ணற்ற நலத்திட்டங்கள் வழங்கியிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆக, தமிழகமும் இம்முறை பெரும்பங்கு வகிக்கும் என்பதற்கு, பெரும் திரளெனக் கூடும் பொதுமக்களின் அன்பே சாட்சி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top