திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. கடவுள் மறுப்பு கொள்கையில் இருக்கும் சிலர் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் பின்னர் அந்த பதாகை அகற்றப்பட்டது. இதனையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பு பதாகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆலய நுழைவு விதி சட்டம், இந்து அல்லாத மாற்று மதத்தினரும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கிறது. இந்து அல்லாத யாருமே கோவிலுக்குள் நுழையக் கூடாது என சட்டத்தில் உள்ளது என மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், மாற்று மதத்தை நம்புகிறவர்களும் கோவிலில் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று (ஜூலை 31) நீதிபதி ஸ்ரீமதி முன்பு வந்தது. இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது? என கேள்வி எழுப்பினார். இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைவதற்கு தடை என்ற பதாகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
இதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பதாகை வைக்க வேண்டும் என்பது அனைத்து இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது. கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றி வருபவர்கள் கூட பலர் கோவிலில் அத்து மீறி நுழைந்து வருகின்றனர். அது போன்றவர்கள் கோவிலுக்குள் வராமல் இருப்பதே நல்லது.