பட்டியல் சமூகத்தின் துணைத்திட்ட நிதியான ரூ.1,540 கோடியை திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத் திட்டத்துக்கு பயன்படுத்துவதை, பாஜக பட்டியல் அணி சார்பில் வன்மையாக கண்டிப்பதாக தடா பெரியசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார். அவருடன் முக்கிய பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.
இது பற்றி அவர் கூறியதாவது: பட்டியல் சமூகத்தின் துணைத் திட்ட நிதி ரூ.1,540 கோடியை திமு
க அரசின் தேர்தல் வாக்குறுதிக்காக பயன்படுத்துவதை பாஜக பட்டியல் அணி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதியை, தங்களின் தேர்தல் வாக்குறுதி மற்றும் கட்சியை வளர்ப்பதற்காக திமுக அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது.
ஏற்கனவே சமத்துவபுரம், இலவச டிவி போன்ற தங்களின் தேர்தல் வாக்குறுதி திட்டத்திற்கு பட்டியல் சமுதாய நிதியை பயன்படுத்தியது போல தற்பொழுது மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கும் பயன்படுத்துவது அப்பட்டமான சமூக அநீதியாகும். பட்டியல் சமூக நலனுக்கு குரல் கொடுக்க வேண்டிய தலைவர்கள் இதைப் பார்த்துக் கொண்டு வாய்மூடி மௌனிப்பதால் இந்த ஏமாற்று வேலை தொடர்கிறது.
பாஜக பட்டியல் அணி இது பற்றி தமிழக ஆளுநர் அவர்களிடம் கடந்த 25.4.2023 அன்று புகார் மனு கொடுத்திருக்கிறோம். தமிழக அரசு உடனடியாக பட்டியல் சமுதாய நிதியை மடைமாற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திமுக அரசை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் பாஜக சார்பில் நடத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.