‘என் மண் என் மக்கள்’ யாத்திரையால் திமுக அச்சமடைந்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையால் திமுக அச்சமடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

டெல்லியில் உள்ள அதிகாரிகள் மாற்றம் தொடர்பான மசோதா மக்களவையில் நேற்று (ஆகஸ்ட் 3) நிறைவேறியது. இந்த மசோதா மீது மக்களவையில் நான்கரை மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

அப்போது திமுக சார்பாக பேசிய தயாநிதி மாறன், “தமிழ்நாடு ஆளுநர் 13 மசோதாக்களை நிலுவையில் வைத்து மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறார். எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிபிஐயும் அமலாக்கத்துறையும் ‘ நேர்மையாக ‘ செயல்படும். சில மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது” உள்ளிட்ட குற்றச்சாட்டை வைத்தார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதன்பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேசினார். “கெஜ்ரிவால் அரசு விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை. சட்டப்பேரவையை கூட முறையாக கூட்டுவதில்லை. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்டால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குலையும்.

தமிழ்நாட்டில் அண்ணாமலை நடத்தி வரும் நடைபயணத்தால் திமுக அச்சமடைந்துள்ளது. அதுவே தயாநிதி மாறனின் உரையில் எதிரொலித்தது” எனக் குறிப்பிட்டார்.

அரசின் வாதங்களை ஏற்காத சில எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளியேறின. இதையடுத்து டெல்லி அதிகாரிகள் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் இல்லாத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜுஜனதாதளம் இம்மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. இரு கூட்டணிகளிலும் இல்லாத பாரத் ராஷ்ட்ர சமிதி, ஏஐஎம்ஐஎம் ஆகியவை இம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கிடையே சில ஆவணங்களை ஆம்ஆத்மி உறுப்பினர் சுஷில் குமார் ரிங்கு கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினார். இதற்காக அவரை இந்த தொடர் முழுவதும் நீக்கி சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top