பாஜக நடத்தி வரும் பாதயாத்திரையைக் கண்டு திமுகவினர் அச்சமடைந்திருப்பதாக தருமபுரியில் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டப வளாகம் உள்ளது. அங்கு தமிழக அரசால் பாரத மாதா ஆலயம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டில் இந்த ஆலயத்தை வணங்குவதற்காக பாஜக மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது பணியில் இருந்த பாதுகாவலர் உள்ளே செல்ல விடாமல் கேட்டிற்கு பூட்டு போட்டுவிட்டார். ஏன் என்று கேட்டால் மேலிட அதிகாரிகள் உத்தரவு என்ற காரணத்தை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் பூட்டை உடைத்துவிட்டு உள்ளே சென்று பாரத மாதாவிற்கு மாலை அணிவித்து வணங்கிவிட்டு சென்றனர்.
இதனையடுத்து திமுகவின் தூண்டுதலால் கே.பி.ராமலிங்கம் மற்றும் மணி, உள்ளிட்ட சிலர் மீது பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கே.பி.ராமலிங்கம் நேற்று (ஆகஸ்ட் 4) பென்னாகரம் வந்தார்.
அப்போது அங்கு இருந்த செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதிலும் உள்ள 508 ரயில் நிலையங்கள் நவீன தரத்துக்கு உயர்த்தப்படும் எனக் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இப்பணிகள், வரும் 6-ம் தேதி பிரதமரால் காணொலி முறையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள திருப்பூர், கரூர், போத்தனூர், சேலம் உட்பட 18 ரயில் நிலையங்களும் அடங்கும். இந்தியாவில் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை புதுப்பித்த வரலாறு இதுவரை இல்லை. முதல்முறையாக இந்த வரலாற்று சிறப்பு மிக்க செயல் மேற்கொள்ளப்பட உள்ளது.
‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 8,9,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிகழ்ச்சியைக் கண்டு திமுக-வினர் அச்சமடைந்துள்ளனர். மறைந்த திமுக தலைவர் அண்ணா காலத்தில் அவருக்கு இருந்தது போன்ற வரவேற்பு வழிநெடுக அண்ணாமலைக்கு தற்போதைய யாத்திரையில் கிடைத்து வருகிறது.
எளிய மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடங்கப்பட்ட திமுக தற்போது செந்தில் பாலாஜிக்கு ” நீதி ” கிடைக்க வேண்டும் என செயல்படுவதாக மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். பாத யாத்திரை மேற்கொண்டிருக்கும் அண்ணாமலையிடம் பொதுமக்கள் இதையெல்லாம் புகாராகக் கூறி வருகின்றனர். திமுக ஆட்சியை பாஜக-வால் மட்டும் தான் அகற்ற முடியும் என மக்களுக்கு தெரிந்துவிட்டது.
பாரத மாதா ஆலயம் என பெயரிடுவதற்கு மாறாக நினைவாலயம் என பெயரிட்டுள்ள திமுக, தான் செய்த இந்த தவறை மறைப்பதற்கு எங்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது. தேசியத்தையும், ஆன்மீகத்தையும் நேசிக்கும் பாஜக-வினர் இதுபோன்ற வழக்குகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ‘தேசம் காப்போம், தமிழகத்தை மீட்டெடுப்போம்’ என்ற லட்சியத்துக்கு எத்தனை தடைகள் ஏற்படுத்தினாலும் பாஜக இலக்கை அடையும். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.