அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைது சட்டவிரோதம் என்று ஆட்கொணர்வு மனு ஒன்றை அவரது மனைவி மேகலா உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதனை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கு இரு தரப்பு வாதங்களும் நிறைவுபபெற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை ( 07.08.2023 ) செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார். எனவே கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறி உள்ளது.
நீதிமன்ற காவலுக்கு போன பின் அது எப்படி சட்ட விரோத கைதாக இருக்கும். நீதிமன்ற காவல் என்பது ஒரு கைதை அதிகார பூர்வமாக்கி விடுகிறது. அதனால் அவர் கைது செய்யப்பட்டது தவறு என்று சொல்ல முடியாது. அதோடு அவருக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவும் செல்லாது. இதனால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் இல்லை, எனவே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
அது மட்டுமின்றி செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு காவலில் 5 நாட்கள் எடுத்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக உயர் நீதிமன்றம் இதேபோல 8 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்ததால் அமலாக்கத்துறையால் காவலில் எடுக்க முடியாமல் போனது.
இந்த நிலையில்தான், மருத்துவமனையில் இருந்த நாட்களை விசாரணை நாட்களாக கருதக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி வரும் 12ம் தேதி வரை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் எனக் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன், மருமகன் உள்ளிட்டோருக்கு சிக்கல் வரலாம் என்றும் கூறப்படுகிறது.