அண்ணாமலை அவர்களின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் திருமங்கலத்தை அடைந்தபோது அங்குத் திரண்டிருந்த மக்களிடையே அவர் ஆற்றிய உரை:
திருமங்கலத்தில் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த அன்பர்களுடன் அதைச் செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன். ஏனென்றால் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதனால் கட்டாயம் மீண்டும் திருமங்கலம் வந்து உங்களது ஆசையைப் பூர்த்தி செய்வேன்
எனக்கு மாலை, சால்வை போன்றவற்றை அணிவிக்க வேண்டாம் என்று ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனால் இன்னும் சில பேர் அவற்றை வைத்திருப்பதைப் பார்க்கிறேன். ஆகவே மீண்டும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். என்னோடு வந்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னோடு இங்கே கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வந்து எனக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் நன்றி.
திருமங்கலத்தைப் பொறுத்தவரை ‘திருமங்கலம் ∴ பார்முலா’ (Thirumangalam Formula) என்ற சொற்றொடர் இன்று தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் சாட்சியாக உள்ளது. எனக்கும் உங்களுக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளது. திருமங்கலம் மாடல், அரவக்குறிச்சி மாடல் என்பதே அது..
நான் போட்டியிட்ட 2021 அரவக்குறிச்சி சட்ட மன்றத் தொகுதி தேர்தலின்போது 350 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 2009ல் திருமங்கலம் இடைத்த தேர்தலில் திமுகவின் ஒரு புதிய ∴ பார்முலா ( தேர்தல் தந்திரம்) ஆரம்பித்து இன்று இந்தியா முழுவதுமே அதைக் கடைப்பிடிக்கின்றனர்.
இதை மாற்ற வேண்டுமென்றால் திருமங்கலத்திலிருந்து அந்த மாற்றம் ஏற்பட வேண்டுமென்பது
எனது ஆசை.
எங்களது யாத்திரையின் நோக்கம் என்னவென்றால் பிரதமர் மோடி அவர்களின் நேர்மையான ஆட்சியையும், திமுகவின் ஊழல் ஆட்சியையும் மக்களுக்கு ஒப்பிட்டுக் காட்ட வேண்டும் என்பதே. இன்று திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் உங்களின் அன்புடனும் ஆசியுடனும் யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 216 தொகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இன்று தமிழகத்தில் என்னவெல்லாம் தவறாக இருக்கிறது? ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி, மக்களுக்கும் அரசுக்கும் பெரிய இடைவெளி, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தை நெம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்தியவில்லேயே மிக அதிகமாக 753000 கோடி ரூபாய் கடன்
வாங்கிய மாநிலமாக மாற்றியுள்ளார், இரண்டாண்டுகளுக்கு முன்பு அதிகக் கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவதாக இருந்தோம். இன்று முதலிடத்துக்கு வந்துள்ளோம். காரணம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர்..
ஒவ்வொரு குடும்பத்தின் தலை மீதும் 352000 ரூபாய் கடன் சுமையை வைத்துள்ளனர்.
இதையெல்லாம் வைத்துக் கொண்டு எவ்வாறு தமிழகம் முன்னேற முடியும்? எப்படி மாணவர்களுக்கு கல்விக் கூடங்களைக் கட்டிக் கொடுக்க முடியும்? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும்? பெண்களுக்கு வசதிகளை வழங்க முடியும்? இது எதையுமே செய்ய முடியாது.. கடன் வாங்கித்தான் ஆட்சியை நடத்த முடியும் என்ற அவலமான சூழ்நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது, குடிப்பதில் தமிழத்தை ‘நெம்பர் ஒன்’ மாநிலமாக மாற்றியுள்ளது திமுக..
5500 க்கு மேற்பட்ட சாராயக் கடைகள். 18 இலிருந்து 60 வயது வரை உள்ளவர்களில் 18% குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் இது 6% ,7%. அந்த 18% ஆண்கள் இருக்கக் கூடிய குடும்பங்களில் பெண்களுக்குப் பிரச்னை உள்ளது.
மது மூலமாக வரக்கூடிய வருமானம் இல்லாமல் அரசை நடத்த முடியாது என்கிறார்கள். இன்று சாராயம் மூலமாக அரசுக்கு வரும் வருமானம் 44000 கோடி ரூபாய்.
ஆனால் இன்று பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு வெள்ளை அறிக்கை அளித்துள்ளோம். அதில் தென்னை , பனை மரங்களிளிலிருந்து கிடைக்கக் கூடிய அனைத்துப் பொருட்களையும் மக்களின் உபயோகத்துக்கு அனுமதிக்க வேண்டுமென்று கூறியுள்ளோம். அதில் தென்னங்கள்ளும் அடக்கம், பனங்கள்ளும் அடக்கம் , பதநீரும் அடக்கம்.அதன் மூலம் மாநில அரசு 1,10,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என்று காட்டியுள்ளோம்.
ஆனால் டாஸ்மாக்கின் மூலம் வருவது 44,000 கோடி ரூபாய் மட்டுமே . ஆனால் திமுகவைப் பொறுத்தவரை டாஸ்மாக்கை மூடி விட்டால் மாநிலத்துக்கு வருமானம் வராது என்பதல்ல.. அவர்களுக்கு வருமானம் வராது என்பதனால்தான் அதைச் செய்ய மறுக்கிறார்கள்.
இப்போது டாஸ்மாக்கில் மாதத்துக்கு 52 லட்சம் பெட்டிகள் (cases)விற்பனையாகின்றன.அதில் 40 %
திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் நடத்தும் சாராய ஆலைகளிலிருந்து வருகிறது. குறிப்பாக டிஆர் பாலு , ஜெகத்ரட்சகன், தமிழகத் தொழில் துறை அமைச்சர் டிஆர் பி ராஜா ஆகியோர் சாராய ஆலைகள் நடத்துகின்றனர். ஆகவே டாஸ்மாக்கை மூடி விட்டு கள்ளுக் கடையைத் திறந்து விட்டால் யாரெல்லாம் குடிக்கிறார்களோ அவர்களுக்கு குடல் புண்ணாகாது. பெண்களுக்குத் தொந்தரவு இருக்காது. திமுகவின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரை ‘மதுவினால் வரும் வருமானம் புழுத்துப்போன தொழுநோயாளியின் கையில் உள்ள வெண்ணை போன்றது. அப்படிப்பட்ட வருமானம் தேவையில்லை என்றார்.
ஆனால் வாய்க்கு வாய் அண்ணாவின் ஆட்சி என்று பேசிய கருணாநிதி கையெழுத்துப் போட்டு
மதுக்கடைகளைத் திறந்தார். அவரது மகன் மேலும் ஒரு படி சென்று 5,500 டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளார்.
இவையெல்லாம் மாற்றப்பட வேண்டும், ஒழிக்கப்படவேண்டும் என்பதும் கூட என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நோக்கங்களில் ஒன்று.
.
இங்கு ஏராளமான பெண்கள் வந்துள்ளீர்கள். திமுக பெண்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்
தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தவுடன் ‘தாலிக்குத் தங்கம்; திட்டத்தை நிறுத்தினார்கள்.
தேர்தலுக்கு முன்பு எல்லோரும் நகைக் கடன் வாங்குங்கள், நாங்கள் வந்தவுடன் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் 68% பெண்கள் கடன் தள்ளுபடிக்குத் தகுதி இல்லை என்று கூறுகின்றனர். இன்று மகளிர் உதவித் தொகை 1000 ரூபாய் தருகிறோம் என்று கிளம்பியுள்ளனர் .
நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் ஸ்டண்ட் அடிக்கின்றனர்.
அதற்குச் செலவாகக் கூடிய 7000 கோடி ரூபாயில் 2500 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதியிலிருந்து திருப்பி விடுகின்றனர். சட்டப்படி அதைச் செய்யக் கூடாது மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு திமுக அரசிடம் நிதி இல்லை..அதனால்தான் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரையைச் சேர்ந்த திமுக அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் ‘ ஸ்டாலின் மகனும், மருமகனும் 27 மாதங்களில் 30000 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர் என்றும் , அவரது தந்தை கருணாநிதி தனது வாழ்நாள் முழுதும் சம்பாதித்ததை விட இது அதிகம் என்றும் கூறியுள்ளார். இந்த ஒலி நாடாவை நாங்கள் வெளியிட்டுள்ளோம். இன்று அவரை துறை மாற்றி விட்டனர். பேசக் கூடாது என்று மிரட்டி வைத்துள்ளனர்.
திமுகவை மூன்று வார்த்தைகளில் நாம் அடக்கிவிடலாம். அது’ கமிஷன்,. கலெக்ஷன். கரப்ஷன் ( கட்டிங் வாங்குவது, அடாவடி வசூல், ஊழல் )
ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளில் 3 லட்சத்து 50000 பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையிலே உறுதி அளித்திருந்தனர் ஆட்சிக்கு வந்த இந்த 27 மாதங்களில் ஒரு லட்சத்து 50000 வேலை வாய்ப்புகளை அளித்திருக்க வேண்டும். ஆனால் இது வரை அவர்கள் அளித்தது 2000க்கும் குறைவான வேலைகளே.
அதனால்தான் திருமங்கலத்தில் இளைஞர்கள் பொறியியல் போன்ற படிப்புகளைப் படித்துவிட்டு வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.
தமிழகத்துக்கு ஒரு தொழிற்சாலை வர வேண்டுமென்றால் திமுகவின் முதல் குடும்பத்துக்கு 30% கமிஷன் தந்தால்தான் உள்ளே நுழைய முடியும். 30% கப்பம் கட்டி எதற்காக தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வர வேண்டும். ?அதனால்தான் தொழிற்சாலைகள் கர்நாடகாவுக்கு, குஜராத்துக்கு, தெலுங்கானாவுக்கு, மஹாராஷ்டிராவுக்கு செல்கின்றன.
திமுக வந்தபிறகு தமிழ் நாட்டில் ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை. ஸ்டாலின் துபாய் போனார். தமிழகத்துக்கு 6000 கோடி ரூபாய் முதலீடு வருகிறது என்றார் ஆனால் 6 ரூபாய் கூட வரவில்லை. ஜப்பான் சென்றார். ஒன்றும் வரவில்லை. இன்று இளைஞர்கள் நட்டாற்றில் விடப்பட்டது போல் உள்ளனர்.
இன்னொரு பக்கம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாகச் சென்ற ஜூன் மாதம் கூறினார், இந்த ஒரு வருடத்தில் ஐந்து லட்சத்து 40,000 பேருக்கு வேலைகள் வழங்கப்பட்டுவிட்டன.
2023 டிசம்பர் 31 முடியும் போது மீதமுள்ள நாலரை லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்து மொத்தமாகப் பத்து லட்சம் இளைஞர்களுக்கு மோடி அவர்கள் வேலை வாய்ப்பு அளிக்கிறார்.
திமுக ஆட்சி கடன்கார ஆட்சி, குடிகார ஆட்சி, ஊழல் ஆட்சி இவை மூன்றும் சேர்ந்து தமிழகத்தைப்
பின்னிழுத்துக் கொண்டுள்ளன.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய மோடி அரசு திட்டங்களுக்காக மட்டும் தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி 10 லட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய்,
திருமங்கலத்தைச் சேர்ந்த வினிதா அவர்கள் தனது மகளிர் சுய உதவிக் குழுவுக்காக 15 லட்சம் ரூபாய் மோடி அரசிடமிருந்து பெற்றுள்ளார். விறகடுப்பு வைத்து சமைத்துக் கொண்டிருந்த இன்னொரு சகோதரி மோடி அவர்களின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்று மாதாமாதம் 200 ரூபாய் மானியமும் பெறுகிறார்.
மோடி அவர்களின் ‘தூய்மை இந்தியா ‘திட்டம் வந்த பிறகு திருமங்கலம் உட்பட அனைத்துப் பகுதிகளும் சுத்தமாக உள்ளன. 2014 வரை கழிப்பறைகளே இல்லாத 57 லட்சம் தமிழகக் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளார் மோடி அவர்கள். பெட்டிக் கடையிலிருந்து சிறு குறு தொழில்கள் செய்பவர்கள் வரை பிரதமர் மோடி அவர்களின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்று தங்களது வியாபாரத்தை விரிவு படுத்தியுள்ளனர்.
சகோதரர் பேரையூர் முருகன் அவர்கள் ‘மோடி அவர்களது முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்று எனது கடையை விரிவுபடுத்தினேன். இப்போது வியாபாரம் நன்றாக நடக்கிறது. மோடி அய்யா அவர்களுக்கு நன்றி ‘ என்று கூறுகிறார். தமிழகத்துக்கு மட்டுமே முத்ரா திட்டத்தின் கீழ் 2லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
அங்கே பாருங்கள், நிறைய சாலையோரக் கடைகள் உள்ளன. அங்கே பாருங்கள் ஒரு அண்ணன் பழக்கடை நடத்துகிறார் .
இங்கே ஒரு அக்கா இருக்கிறார். கொரோனா கால கட்டத்துக்குப் பின் சாலையோர வியாபாரிகளுக்கு ‘ஸ்வநிதி’ திட்டத்தின் மூலம் மோடி ஐயா அவர்களின் அரசு கடன் வழங்குகிறது. யாரிடமும் சென்று கை ஏந்தத் தேவை இல்லை. . பேரையூரைச் சேர்ந்த மாரீஸ்வரி ‘ நான் சாலையோரத்தில் பூக்கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் பொருளாதார நெருக்கடி வந்தபோது தக்க சமயத்தில் மோடி அய்யா அவர்களின் திட்டம் கை கொடுத்தது’ என்று கூறுகிறார்..
தமிழகத்தில் மட்டுமே ஒருலட்சத்து 80 ஆயிரத்து இருபத்தேழு சாலையோர வியாபாரிகள் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.இவர்கள் அனைவருமே மோடி அய்யாவின் முகவரி. ஏழைப்பங்காளனாக மோடி அய்யாவின் ஆட்சி நடக்கிறது. இவர்களெல்லாம் நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காக ஊழலில்லாமல், லஞ்சம் இல்லாமல் 10,76,000 கோடி ரூபாய் தமிழகத்துக்கு நிதி அளித்துள்ளார்.
ஸ்டாலின் தான் மக்களுக்குத் தந்ததாக எதைச் சொல்வார்? அவரது குடும்பம் சம்பாதித்ததைத் தவிர 27 மாதங்களாக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதனால்தான் உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை வைக்கிறோம். 2024 நாடாளுமன்றத்தேர்தலில் நமது பிரதமர் மோடி அவர்கள் மூன்றவது முறையாகப் பிரதமராக வர வேண்டும். 400 எம்பிக்களுடன் மோடி அவர்கள் ஆட்சியில் அமர்வார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நமது விருப்பம் என்னவென்றால் தமிழகம் புதுச்சேரியிலிருந்து 40 எம்பிக்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
அந்த 40 எம்பிக்களிலிருந்து அமைச்சர்கள் வர வேண்டும். நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். நல்ல வருமானம் அளிக்கக் கூடிய தொழில்களைத் தொடங்க நமது மத்திய அரசு துணையிருக்கும் .
உற்சாகமான வரவேற்பளித்த தாமரைச் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாத காலம் உள்ளது. சகோதர, சகோதரிகளே, தேர்தலுக்கு முன்பு திமுக காரர்கள் நிறைய பொய் சொல்லிக் கொண்டு வருவார்கள். திமுவின் அகராதி என்னவென்றால்:
அ- அக்கிரமம், ஆ- ஆக்கிரமிப்பு, இ – இருட்டு, உ -உருட்டு ஊ- ஊழல், எ- எகத்தாளம் ஏ- ஏமாற்றுவது,ஏழு மாத காலம் உள்ளது
ஆகவே திமுகவினர் இம்மாதிரியெல்லாம் செய்து தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்வார்கள். 2019 ல் இப்படிச் செய்துதான் வெற்றி பெற்றார்கள். ஆனால் இப்போது நாம் தெளிவாக இருக்கிறோம்.
ஆகவே 40க்கு 40 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்து மோடி அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வணக்கங்கள்.
இந்தப் பேரணியில் ஏராளமான விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டுள்ளனர். .
அவர்களுக்கு என் நன்றி. அடுத்தபடியாக ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் வந்துள்ளனர். இந்திய ராணுவத்துக்கு மிக அதிக எண்ணிக்கையில் வீரர்களை அனுப்புவது திருமங்கலம் பகுதி. உங்களுக்கும் எனது வாழ்த்துக்களை, நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வந்த்துள்ளனர்.
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் வணக்கங்கள். அதிகமான எண்ணிக்கையில் சகோதரிகள், தாய்மார்கள் வந்துள்ளீர்கள் உங்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிக எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் வந்துள்ளீர்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.நன்றிகள். தரவு மேலாண்மைத் துறையிலிருந்து வந்துள்ளவர்களுக்கு நன்றி, வணக்கம்.
மாவட்டத் தலைவர் சசிகுமார் அவர்கள், நரசிங்கப் பெருமாள் அவர்கள், பொருளாதாரப் பிரிவின் தலைவர் ஷா அவர்கள், ராஜரத்தினம் அவர்கள், துணைத்தலைவர்கள் சரவணா குமார் அவர்கள் , தங்க பாண்டி அவர்கள் சிவலிங்கம் அவர்கள், இந்திராணி செல்வம் அவர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஜெயக்குமார் அவரகள், அழகுமணி அவரகள், மண்டல் தலைவர்கள் குபேந்திரன்,ஸ்வாமி ரங்கையா, பாலமுருகன் ,ஐடி பிரிவின் தலைவர் வேல் முருகன் அவர்கள் – ஐடி பிரிவிலிருந்து மிகப் பெரிய படை வந்துள்ளது.
திருமங்கலத்தைப் பொறுத்தவரை ஐடி பிரிவு மிக வலிமையாக உள்ளது. உங்கள் அணிக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.
எங்களுக்காக இத்தனை நேரம் வெய்யிலில் நின்ற நாடகக் கலைஞர்கள், கலைக் குழு அவர்களுக்கும் நன்றிகள். மோடி அய்யா அவர்களுக்கு உங்களது ஆதரவு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்.
நாம் நிகழ்ச்சி நடத்தும் இடங்களிலெல்லாம் நிகழ்ச்சி முடிந்த பிறகு இடத்தைத் தூய்மை செய்யும் நமது தூய்மை இந்தியா திட்டக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள், நன்றிகள்.
பாரத் மாதா கி ஜெய்! பாரத அன்னையின் புகழ் ஓங்குக!
தொகுப்பு: இரா.ஸ்ரீதரன்