கொள்ளையடித்த, சுரண்டிய சொத்தில் பத்து சதமாவது மக்களுக்கு கொடுப்பீர்களா ? – அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.சாருக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி 

என் மண்  என் மக்கள் யாத்திரை அருப்புக் கோட்டையை  அடைந்த போது அண்ணாமலை அவர்கள் மக்களிடையே ஆற்றிய உரை :

அருப்புக் கோட்டையில் திரண்டிருக்கும்   மக்களைப்   பார்க்கும்போது பிரதமர் மோடி அய்யா மீது நீங்கள் வைத்திருக்கும், அன்பு, மதிப்பு, நம்பிக்கை இவை தெரிகின்றன. உங்கள்  ஊர்ப்  பட்டு எவ்வாறு ஜொலிக்கிறதோ  அதே போன்ற பிரகாசம் உங்களது கண்களில் தெரிகிறது.  மோடி அவர்கள் மூன்றாவது முறையும் பிரதமராக வர வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.  இந்தியாவைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். 

அருப்புக்கோட்டை மக்கள் தேசியவாதிகள். நமது நாடு நன்றாக இருக்க வேண்டுமனென்று நினைப்பவர்கள் . இங்கிருக்கும் சொக்கநாதர் கோயிலைப் பார்க்கும்போது இந்த ஊரின் பழமையும் பெருமையும் நமக்குப்  புலப்படும்.அருப்புக்கோட்டை ஒரு தொழில் நகரமாக இருந்ததற்கான சான்றுகள் பாண்டியர், சோழர் மற்றும் விஜயநகர ஆட்சிக் காலங்களின் கல்வெட்டுக்களில் காணக் கிடைக்கின்றன.

அருப்புக் கோட்டையும் தொழிலும் பல  நூற்றாண்டுகளாகப் பின்னிப் பிணைந்தது .

விருதுநகர்  மாவட்டத்திலிலுள்ள மிக முக்கியமான சட்ட மன்றத் தொகுதி இது.  எல்லாவற்றையும் தாண்டி பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த மாவட்டத்தில் உள்ள ஊர். ஆனால் இங்கு இப்போது உள்ள ஆளும் கட்சி அரசியல்வாதிகள் காமராஜர் அய்யாவுக்கு நேர் எதிர்மறையான அரசியல் செய்பவர்கள்.12 ஆறுகளைத் தடுத்து அணைகள் கட்டிய ஒரே தலைவர் இந்தியாவிலேயே காமராஜர் ஒருவர்தான். அவரது திட்டங்களால் தமிழகத்தில் விவசாயம் செழித்தது. அவர் முதலமைச்சராக  இருந்த 1963 வரையிலும், பின்பு ஒரு 20 ஆண்டுகள் வரையிலும் அவரது திட்டங்களால் விவசாயம் செழித்தது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1972ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் துவங்கிய பின்பு அவர்  போட்டியிட்ட முதல் தொகுதி அருப்புக்கோட்டை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று அருப்புக் கோட்டையின் எம் எல் ஏ மற்றும்  அமைச்சர் பெயரும் ராமச்சந்திரன்தான்.

அந்த ராமச்சந்திரன் ( எம்ஜிஆர்) அள்ளி அள்ளிக் கொடுத்தார்   இப்போது உள்ள ராமச்சந்தின் நன்றாக ‘வாங்குகிறார்’.( எம்ஜி ஆர் அவர்களது கை கொடுப்பதால்  மேலேயும். கே கே எஸ் எஸ் ஆர் ‘வாங்குவதால்’ கீழேயும் உள்ளது என்பதைக்  காட்டுகிறார் ). இதுதான் இவர்கள் இருவருக்கும் உள்ள வேற்றுமை. ஒருவர் மக்களுக்காக வாழ்ந்தார், இன்றும் மக்கள் எம் ஜி ராமச்சந்திரனை தெய்வமாக  நினைக்கின்றனர். இன்னொருவரை  எப்போது அருப்புக்கோட்டையிலிருந்து வெளியே அனுப்பலாம் என்று நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடத்தில் நீங்கள் அனைத்தையும் பார்த்து விட்டீர்கள் .

கே கே எஸ் எஸ் ஆர்  ராமச்சந்திரன் அவர்களிடம்  உள்ள துறைகள் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை. பேரிடரை உங்களுக்குக் கொடுத்து விட்டார் , வருவாய்த்துறையை தன்னிடம் வைத்துக் கொண்டு விட்டார்.

தமிழகத்துக்கு வருவாய் வருகிறதோ இல்லையோ கே  கே  எஸ்  எஸ் ஆர் அவர்களின் மகனுக்கு நல்ல வருவாய் வருகிறது. 2021 ஆகஸ்ட் மாதம் கே கே  எஸ் எஸ் ஆர் ஒரு கருத்தைச் சொன்னார். அதற்கு

 அருப்புக்கோட்டைக்கு வரும்வரை பதில் சொல்லக் கூடாது என்று நான் இருந்தேன். இன்று அதை பதிவு செய்கிறேன். அதாவது  ‘தென் தமிழகம் வளர்ச்சி அடையாததற்குக்  காரணம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்கள் மாநில அரசுக்கு எதிராக அரசியல் செய்ததுதான்’ என்று அவர் கூறியிருந்தார்.

இதை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள், ஞாபகம் வைத்துள்ளீர்கள் என்று தெரியவில்லை.

இந்தக் கருத்தை இந்த மண்ணில் ஒருவர் சொல்லியிருந்தால் அவர் முத்துராமலிங்கத் தேவர் அய்யாவைப்  புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். முத்துராமலிங்கத்தேவர் அய்யாவுக்கு நேர் மாறாக அரசியல் செய்யக் கூடியவர்கள்தான் இப்படிப் பேச முடியும்.   

குறிப்பாக இளைஞர்களுக்கு இதெல்லாம் தெரியாது அவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்பது என் ஆசை.

முத்துராமலிங்கத் தேவர் அய்யா 1963 ல் இறைவனோடு கலத்து விட்டார். என்னைப் பொறுத்தமட்டில் தேவர் அய்யா ஒரு கடவுள் .

1963 என்பது திமுக ஆட்சிக்கு வருவதற்கு 4 ஆண்டுகள் முந்தைய ஆண்டாகும். முத்துராமலிங்கத் தேவர்  அய்யா தனது சொத்துக்களை 16 பாகங்களாகப் பிரித்து 16 பேர் பெயரில் எழுதினர். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் அதை  மக்களது நலனுக்காகச் செலவழிக்க வேண்டும் என்பதே.

அதில் ஒருவர் ஏ ஆர்  பெருமாள் தேவர் அய்யா அவர்கள்.  அவர் அருப்புக் கோட்டையில் பள்ளி கல்லூரி முதலியவற்றைத் தொடங்கி மக்கள் பணி செய்தார்.  சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து ,

 அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்து பிறகு மறைந்தார்.  முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்களை பற்றி வாய் கூசாமல் பேசிய கே கே எஸ் எஸ் ஆர் அவர்களிடம் 

ஒரு கேள்வி கேட்கிறேன்.  நீங்கள் கோயில் சொத்துக்களைக் கொள்ளை அடித்து வைத்துள்ளீர்கள். ஏழை மக்களின் பணத்தைச் சுரண்டி வைத்துள்ளீர்கள். அதில் ஒரு  பத்து சதவிகிதத்தை மக்களுக்காகக்  கொடுங்கள் பார்க்கலாம்?

முத்துராமலிங்கத் தேவர் அய்யா போன்று மொத்த சொத்தையும் தர வேண்டாம், 

ஏ ஆர் பெருமாள் தேவர் அய்யா அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்தை எல்லாம் மக்கள் நலனுக்குச் செலவழித்தார்.

அப்படிப்பட்ட மண்ணிலே தேவர் அவர்களை இப்படிஎல்லாம் பேசுகிறீர்களே? 

இங்குள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் திமுக மதத்தின் அடிப்படையில் மக்களைப்  பிரிக்க இடம் கொடுக்காதீர்கள் என்பது தான்.  உலகில் 13 நாடுகள் தங்களது உச்ச பட்ச விருதுகளை மோடி அவர்களுக்கு வழங்கியுள்ளன. அதில் ஏழு நாடுகள் இஸ்லாமிய சட்டத்தின்  அடிப்படையில்  இயங்கும் நாடுகள். இஸ்லாமியர், கிறித்தவர், ஹிந்து என்று மக்களைப் பிரித்து அரசியல் செய்யும் திமுக மற்றும் கே கே எஸ் எஸ் ஆர் போன்றவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு 9 ஆண்டுகளில் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு அளித்த கல்வி உதவித் தொகை காங்கிரஸின் 10 ஆண்டுகளில் கொடுத்ததை விட 50% அதிகமாகும். 

கே கே எஸ் எஸ் ஆர் போல பட்டியல் இன சகோதரர்களை நிற்க வைத்து சேர் மேல் கால் மேல் போட்டு நாங்கள் உட்கார்ந்து பேச மாட்டோம்.

மக்களை இணைப்பதே எனது யாத்திரையின் ஒரு நோக்கமாகும்.

மோடி அவர்கள் அருப்புக் கோட்டைக்கு வழங்கிய நிதியால் 20000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

திமுக என்ற தீய சக்தி அகற்றப் பட வேண்டும். வருண  பகவான் அதை ஆமோதிக்கிறார்.

எனவே,  2024 நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது ஆதரவை எங்களுக்கு அளிக்க வேண்டும்.

தொகுப்பு: இரா.ஸ்ரீதரன் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top