நேற்றைய ( 10.08.2023 ) என் மண் என் மக்கள் யாத்திரை விருதுநகரில் நிறைவு பெற்றதை அடுத்து, ஊடகவியலாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
யாத்திரையை பற்றி எதிர்க்கட்சி விமர்சிக்க துவங்கினால், அது மக்கள் மத்தியில் சென்று விட்டது என்று அர்த்தம். 2024ல் மீண்டும் மோடி பிரதமாகும் போது தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் செல்ல வேண்டும். தமிழகத்திற்கு 66 மத்திய அமைச்சர்கள் மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய வந்தனர். அப்போது திமுக அமைச்சர்கள் விமர்சித்தனர்.
இந்தியாவின் பெரிய எய்ம்ஸ் மருத்துவமனையாக மதுரை எய்ம்ஸ் அமையும்; டெல்லிக்கு இணையாக இருக்கும். 2026 மே மாதம் பயன்பாட்டிற்கு வந்து விடும்.
திமுக தேர்தல் அறிக்கையில் ஐந்து ஆண்டுகளில் 3.5 லட்சம் பேருக்கு, அரசு வேலை கொடுப்போம் என்றனர். கணக்கின் படி ஒரு ஆண்டுக்கு, 70 ஆயிரம். 27 மாதங்கள் ஆட்சி முடிந்துள்ள நிலையில், 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் ஒரு குரூப் 4 தேர்வுக்கு ரிசல்ட் அறிவிக்க, 13 மாதங்கள் எடுத்து கொள்கின்றனர். ஓராண்டுக்கு இரண்டு டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் நடக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. பிரதமர் மோடி, 10 லட்சம் வேலை வாய்ப்பு என 2022 ஜூனில் அறிவித்தார். இன்று 5.41 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து விட்டார். 2023 டிசம்பரில், 10 லட்சம் பேருக்கு கொடுத்து விடுவோம்.
ஆனால் தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.,சிக்கு தலைவர் இல்லை. அரசு பள்ளிகளில், ‘டெட்’ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. தமிழக அரசு, வேலையை உருவாக்கி சம்பளம், ஓய்வூதியம் வழங்க பணம் இல்லாமல் ‘அவுட்சோர்சிங்’ முறைக்கு செல்கிறது. தமிழக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் வேலை வாய்ப்பின்மை ஐந்து ஆண்டுகளில், வெடித்து சிதற உள்ளது.
காங்கிரசின் ஆட்சியின்போது இருந்த அதே விதிமுறைகளைத்தான் டெல்லிக்கு கொண்டு வந்துள்ளோம். 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி, மாநில அரசுகளை, 51 முறை கலைத்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா. இன்று திமுக அந்த கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது.
விருதுநகர் பாஜக அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட பாரத மாதா சிலை, சட்டத்தின் துணையுடன் மீண்டும் அங்கு நிறுவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.