நாளை இன்னொமொரு சுதந்திர தினம். நாடெங்கும் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் பகிரப்பட்டு, முழக்கங்கள் ஒலிக்கப்பட்டு இந்த நாள் கடந்து போகும். ஆனால் (இந்த நேரத்திலாவது) இளைய தலைமுறைக்கு சில உண்மைகள் தெரிய வேண்டும் என ஆசைப்படுகிறது மனம்.அவை நமக்குப் பாடப்புத்தகங்களால் சரியாக, விரிவாகச் சொல்லப்படவில்லை. கீழுள்ளவை நான் தேடித் தேடிப் படித்து அறிந்து கொண்டவை
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் ஜெயித்தது. ஆனால் அதையடுத்து போரின் காரணமாக ஏற்பட்ட செலவினால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. காலனி நாடுகளை, குறிப்பாக இந்தியாவை, இந்தியாவில் ஏற்பட்டிருந்த எழுட்சியை, சமாளிக்க அதனிடம் பணபலமும் படைபலமும் இல்லை. “ Britan had won the war but it was losing the empire.” என்பது அந்நாளைய பிரபல வாசகம்
இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் எனக் கணித்திருந்த சர்ச்சில், இந்தியாவை விட்டு வெளியேறினாலும் இந்தியா மீது பிரிட்டனுக்குப் பிடி இருக்க வேண்டும் என்று நினைத்தார்.அப்படி இருக்க வேண்டுமானால் இந்தியாவில் உள்நாட்டு ,மோதல்களும் குழப்பங்களும் இருக்க வேண்டும் என நினைத்தார். 1945லேயே இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருந்ததால் அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை, இந்தியா, பாகிஸ்தான், பிரின்ஸ்ஸ்தான் (560சமஸ்தானங்களைக் கொண்டது) என்று மூன்றாகப் பிரிக்கத் திட்டமிட்டார் (மேல் விவரங்களுக்கு காண்க: India’s Bismark: Sardar Patel by Balaraj Krishnaவின் நூலில்“A Churchillian Plan” என்ற அத்தியாயம்) இந்த அத்தியாயத்தை அவர் அப்போது வைஸ்ராயாக இருந்த வேவெல் பிரபுவின் டைரிக் குறிப்புகளைக் கொண்டு எழுதியுள்ளார்.
சர்ச்சிலுக்கு இந்தியா மீது எப்போதும் காழ்ப்பு உண்டு. 1943ல் இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த போது இந்தியாவில் செயற்கையாக உணவுப் பஞ்சம் ஏற்படுத்தப்பட்டது. செயற்கையாக எனச் சொல்லக் காரணம். 1943 ஜனவரி – ஜூலை மாதங்களில் இந்தியாவிலிருந்து 70 ஆயிரம் டன் அரிசி இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டது. அது நாலு லட்சம் இந்தியர்கள் ஒரு முழு ஆண்டு சாப்பிடப் போதுமானது. அது அங்கே போனதால் இங்கே பஞ்சம் ஏற்பட்டது.
அதை பிரிட்டன் போர்க்களத்தில் இருந்த கிரேக்கர்களுக்கு அனுப்பியது. இந்தியப் பஞ்சத்தைச் சுட்டிக் காட்டி வேவல் அரிசியை ஏற்றுமதி செய்ய வேண்டாம் எனக் கேட்டார். இந்தியர்களைக் காப்பாற்றுவதை விட கிரேக்கர்களைக் காப்பாற்றுவது முக்கியம் என்று அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார். எப்படியென்றாலும் அரைப்பட்டினி கிடக்கும் இந்தியர்கள் முழுப்பட்டினி கிடந்து செத்தால் ஒன்றும் குறைந்து விடாது என்பது அவர் நினைப்பு. அப்போது சர்ச்சில் அமைச்சரவையில் இந்தியா அமைச்சராக இருந்த அம்ரே இது பற்றி எழுதுகிறார்: “Winston may be right in saying that the starvation of anyhow under-fed Bengalis is less serious than sturdy Greeks, இதனால் 3 லட்சம் இந்தியர்கள் பட்டினியால் செத்தார்கள். (காண்க:Churchill’s secret war by Madhusree Mukherjee)
போரை அடுத்து வந்த தேர்தலில் சர்ச்சில் தோற்றுப் போனதால் அவரால் அவரது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அவரை அடுத்து பிரதமரான அட்லீ. 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் சொல்லப்பட்ட இரு முக்கிய விஷயங்கள். 1. ஜுன் 1948 வாக்கில் இந்தியாவிற்கு முழுமையான தன்னாட்சி கொடுக்கப்படும். 2.அங்குள்ள சமஸ்தானங்கள் பற்றி அதிகார மாற்றத்திற்குப் பின் முடிவு செய்யப்படும். இதில் பிரிவினை பற்றிய குறிப்பு இல்லை (முதலில் குறிக்கப்பட்ட நாள் ஜூன் 1948தான். ஆகஸ்ட் 15 அல்ல)
பத்து நாள்களுக்குப் பின் ஜூன் 3ஆம் தேதி அட்லீ இன்னொரு அறிவிப்பு வெளியிட்டார் அதற்கு மவுண்ட்பாட்டன் திட்டம் எனப் பெயர், அதில் அவர் இந்தியாவைப் பிரிப்பது என்ற கொள்கையை பிரிட்டீஷ் அரசு ஏற்கிறது என்கிறார்.
எந்தெந்த பகுதிகளை பாகிஸ்தானுக்குக் கொடுப்பது என்பதில் ஜின்னாவிற்கும் படேலுக்குமிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. ஜின்னா பஞ்சாப்பையும் வங்காளத்தையும் முழுமையாகக் கேட்டார். படேல் இரண்டு மாநிலங்களிலும் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்கள் இந்தியாவுடன் சேர்க்கப்பட வேண்டும் என்றார்
எல்லை வகுக்க சிரில் ராட்கிளிஃப் என்பவரை பிரிட்டீஷ் அரசு அனுப்புகிறது. அவர் 1947 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி இந்தியா வருகிறார். 1947 ஆகஸ்ட் 15க்குள் அவர் எல்லைகளை வகுத்தாக வேண்டும். அவருக்கு இருப்பது வெறும் 5 வாரங்கள் மட்டுமே. “ இது சாத்தியமே இல்லை. எந்த மதத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிய ஊருக்கு ஊர், தெருவிற்கு தெரு, வீட்டுக்கு வீடு மதவாரியான சர்வே எடுக்க வேண்டும். ரொம்ப சிக்கலான விஷயம்.இதை ஐந்து வாரத்தில் செய்ய முடியாது” என்று ஆட்சேபிக்கிறார்.
அப்போது மவுண்ட்பாட்டனின் செயலாளராக இருந்த இஸ்மே பிரபு ஒரு வரைபடத்தைக் கொடுக்கிறார். சர்ச்சில் ஏற்கனவே எல்லை வகுத்துவிட்டார். நீங்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள் போதும், எனச் சொல்லிவிட்டுச் சொல்கிறார் “மத்தியக் கிழக்கில் பிரிட்டன் முதலீடு செய்துள்ள எண்ணை வயல்களை பாதுகாக்க வேண்டுமானால் நமக்கு கராச்சித் துறைமுகம் வேண்டும். நேரு சோவியத் யூனியனின் அபிமானி. அவர் நமக்கு சரிப்பட்டு வரமாட்டார். ஜின்னாவை வளைக்க முடியும். கையெழுத்துப் போடுங்கள்” என்கிறார்
என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள் என்று கோபம் கொள்ளும் ராட்கிளிஃப் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்னரே இந்தியாவிலிருந்து கிளம்பி விடுகிறார். ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் இரு நாடுகளிலும் அதிகாரப் பரிமாற்றம் நடந்து முடிந்த பிறகு இரண்டு நாள் தள்ளி எல்லை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று முன்னர் பிரிட்டீஷ் அரசு அறிவித்திருந்தது. ஆனால் ராட்கிளிப் அதற்கு இங்கிருக்காமல் முன்னரே கிளம்பி விடுகிறார் (இந்த விவரங்களை நரேந்திர சிங் சரிலா எழுதியுள்ள The Shadow of the Great Game: The Untold Story of India’s Partition என்ற நூலில் காணலாம்.
நரேந்திர சிங் மத்திய பிரதேசத்தில் உள்ள சரிலா என்ற சமஸ்தானத்தின் இளவரசர். மவுண்ட் பேட்டனின் பாதுகாப்பு அதிகாரி (ADC) பின் ஐக்கிய நாடுகள் சபை, பிரேசில், ஸ்பெயின், பிரான்ஸ், லிபியா, சுவிட்சர்லாந்த் ஆகிய நாடுகளில் இந்திய தூதராக இருந்தவர்
இந்தியாவின் ஸ்திரத் தன்மையைக் குலைக்க சுதந்திரத்திற்கு முன் மேலை நாடுகள் தொடங்கிய குடைச்சல் 90கள் வரை நீடித்தது. அதைப் பற்றி இன்னொருநாள்
பிரபல எழுத்தாளர் மாலன் தனது முகநூலில்