சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், 4 முறை ‘சம்மன்’ அனுப்பியுள் விசாரணைக்கு ஆஜராகாமல், போங்கு காட்டி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார், நேற்று (ஆகஸ்ட் 13) கொச்சியில் அமலாக்கத்துறையினரின் பிடியில் சிக்கினார்.
கேரள மாநிலம் கொச்சியில் பல நாட்களாக பதுங்கியிருந்த அவரை, உளவுத் துறையினர் உதவியுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், 2011 – 15 வரை, போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக, 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாகவும், இதற்கு அவரது சகோதரர் அசோக்குமார், நேர்முக உதவியாளர் சண்முகம், நெருங்கிய கூட்டாளி கார்த்திகேயன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது பற்றி, சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்டோர், சென்னை போலீஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அத்துடன், செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டோர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு மிக முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். அதன் அடிப்படையில், ஜூன் 14ம் தேதி, செந்தில் பாலாஜியை கைது செய்தனர். நெஞ்சு வலி காரணமாக, அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த விசாரணையின் போது ஆரம்பத்தில் அதிகாரிகளின் கேள்விகளுக்கு, ‘தெரியாது, ஞாபகம் இல்லை’ என்று கூறி வந்த அவர், அடுக்கடுக்கான ஆதாரங்களை காட்டிய பின் மிரண்டார். புகார்தாரரான கணேஷ்குமார் உள்ளிட்டோர் நட்பாக பழகி, சதி செய்து தன்னை சிக்க வைத்துவிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.
அரசு வேலை கோரிய நபர்களிடம் இருந்து செந்தில் பாலாஜி வங்கி கணக்கில், 1.34 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி மேகலா வங்கி கணக்கில், 29.55 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கேட்ட போது, என் சகோதரர் வசம் கொடுத்து வைத்திருந்த பணம் என்றார். நீங்கள் உண்மையை தெரிவிக்கவில்லை என்றால், உங்கள் மனைவிக்கும் சிக்கல் நேரிடும் என்று கூறியதால், உண்மையை ஒப்புக்கொண்டார்.
அவரிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில், 3,000 பக்க குற்றப் பத்திரிகை தயாரித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். செந்தில் பாலாஜியை மீண்டும் புழல் மத்திய சிறை மருத்துவமனையில் வைத்து உள்ளனர்.
இதற்கிடையே, இந்த மோசடிக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 முறை சம்மன் அனுப்பினர். அவர் போங்கு காட்டி வந்தார்.
கரூரில் அசோக்குமாரின் மாமியார் லட்சுமி, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, மகள் நிர்மலாவுக்கு ‘செட்டில்மென்ட்’ பத்திரம் வாயிலாக தானமாக கொடுத்துள்ளார். இதில், மிகப்பெரிய அளவில் தில்லுமுல்லு நடந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி லட்சுமி, நிர்மலா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பினர். அவர்களும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அசோக்குமார் தலைமறைவானார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் நிலை வரும் என அறிவித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வந்தனர். அவர் நேபாளத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய உளவு அமைப்பான, ஐ.பி., அதிகாரிகளின் உதவியை நாடினர். அவர்கள், அசோக்குமார் பற்றி விசாரித்தனர். அவரின் மொபைல் போன், ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
அவர், மொபைல் போன் செயலி வழியாக குடும்பத்தினரிடம் அடிக்கடி தொடர்பு கொண்ட விபரம் தெரிய வந்தது. அந்த எண்ணை ஆய்வு செய்தபோது, வேறு ஒருவரின் பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டு இருந்தது. அந்த நபர் குறித்து விசாரித்த போது, அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.
இதையடுத்து, ஐ.பி., அதிகாரிகள், அந்த குறிப்பிட்ட எண்ணில் இருந்து, தமிழகத்திற்கு தொடர்பு கொள்வது பற்றி தகவல் சேகரித்தனர். அந்த எண்ணை அசோக்குமார் பயன்படுத்துவது தெரிய வந்தது. இதையடுத்து, கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் அருகே அசோக்குமாரை நேற்று, (ஆகஸ்ட் 13) ஐ.பி., அதிகாரிகள் பிடித்து விசாரித்துள்ளனர். பின்னர் அவரை, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர். அசோக்குமார் இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.