நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு திமுகதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வீரபாண்டியன் பட்டணத்தில், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை அண்ணாமலை திங்கட்கிழமை தொடங்கினார். முன்னதாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து ராஜ் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் 23 பேருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
நீட் தேர்வு அரசியலாக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 54 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே போல அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 13 சதவீதத்திலிருந்து 31 சதவீதகமாக உயர்ந்துள்ளது. நிகழ் ஆண்டு தேர்வில் தமிழக மாணவர் முதலிடத்தைப் பெற்றுள்ளதோடு, முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தற்போது ஆளும் கட்சியாக உள்ளபோதும் நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது.
ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி நடத்தப்படுகிறது. தமிழகத்திலும் நடத்தப்பட்ட அத்தகையப் பயிற்சி, திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1.06 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் வெற்றிபெற முடியாமல் மாணவர்கள், உயிரை மாய்த்துக்கொள்வது வருத்தம் அளிக்கிறது. இதற்கு முழு காரணம் திமுகதான். நீட் தேர்வால் இன்னொரு உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கும் திமுகதான் காரணம்.
திருச்செந்தூர் அமலி நகரில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி, கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் போராடி வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் லாபத்துக்காக, தமிழக முதல்வரே, எதிர்க்கட்சித் தலைவரைப்போல செயல்படுகிறார். அரசியல் காரணங்களுக்காக, ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தும், திமுக அமைச்சர்களின் ஊழல்கள் பற்றியும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவுகளில்,
“சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்றும், மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை திரு செல்வசேகர் அவர்களும் தற்கொலை செய்திருக்கிறார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
“எந்தச் சூழ்நிலையிலும், உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல, எதற்கான தீர்வுமல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ஒரு நிமிட தவறான முடிவால், உங்கள் பெற்றோர்கள் ஆயுட்காலம் முழுவதும் வேதனைப்படும்படி செய்வது தவறு.
“மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரித் தேர்வுகள், அரசுப் பணித் தேர்வுகள், குடிமையியல் பணித் தேர்வுகள் என தங்கள் கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையில் பரிட்சைகள் பள்ளி கல்லூரி பருவத்துடன் முடிவடைவதில்லை என்பதே எதார்த்தமான உண்மை.
“குழந்தைகள், சமூக அழுத்தங்களுக்குப் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்குரியது. ஒவ்வொரு குழந்தையும் தனிச் சிறப்புடனேயே பிறக்கிறது. யாருக்கான வாய்ப்பையும் யாரும் பறித்து விட முடியாது. எனவே, குழந்தைகளை, கல்வி, மதிப்பெண்கள் வைத்து ஒருவரோடு ஒருவர் ஒப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணங்களை விதைப்போம். மன உறுதியுடன் வளர்ப்போம்”, என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது