புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கும் பண மோசடியில் முக்கியப் பங்கு உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ம் ஆண்டு 3 வழக்குகளைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு பின் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதே போன்று வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் அசோக் குமார் தலைமறைவாக உள்ளார்.
இதற்கிடையில், அவர் கேரள மாநிலம் கொச்சியில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியானது. ஆனால் அந்தத் தகவலை அமலாக்கத்துறையினர் மறுத்துள்ளனர். இதுவரை 4 முறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார் என்று மட்டுமே தெரிவித்துள்ளனர்.
மேலும் அசோக்குமாரின் மனைவி நிர்மலா, அவரது மாமியார் லட்சுமி உள்ளிட்டோருக்கும் 4 முறை சம்மன் அனுப்பியும், அவர்களும் ஆஜராகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.. இந்த மோசடியில் 3 பேருக்கு முக்கியப் பங்கு உள்ளது எனவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. விரைவில் அசோக்குமார் கைது செய்யப்பட்டால் பல உண்மைகள் வெளியில் வரலாம் என கூறப்படுகிறது.