விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், புகார்தாரரான ஓய்வுபெற்ற தாசில்தார், முதல்முறையாக ஆஜராகி சாட்சி அளித்தார். அப்போது அவர், ‘அப்போதைய உயரதிகாரிகள் கூறியதால் தான் நான் புகார் அளித்தேன்’ என, ‘பல்டி’ அடித்தார்.
தமிழகத்தில், கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில், அரசு சார்பில், செம்மண் குவாரி ஏலம் விடப்பட்டது. இந்த குவாரியில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக, 2 லட்சத்து 64 ஆயிரம் லோடுகள் செம்மண் எடுத்து விற்றதன் வாயிலாக, அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி, முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, அமைச்சர் பொன்முடி, குவாரியை ஒப்பந்தம் எடுத்த அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி., உறவினர் ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகியோர் மீது, 2012ம் ஆண்டில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது, சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 16) விசாரணைக்கு வந்தது. சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆஜராகவில்லை. இந்த வழக்கில், அரசு தரப்பில் புகார் அளித்திருந்த அப்போதைய வானூர் தாசில்தார்
குமாரபாலன், தற்போது ஓய்வு பெற்ற நிலையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ‘‘அப்போதைய உயரதிகாரிகள் கூறியதால்தான் நான் புகார் அளித்தேன்,’’ என கூறி, ‘பல்டி’ அடித்தார். இதனால் இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
யார் உயர் அதிகாரிகள் ? அப்படியானால் புகாரின் தன்மையில் உள்ள உண்மை என்ன ? யாருக்காக இவர் இப்படி பல்டி அடிக்கிறார் என பல்வேறு கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இந்நிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.