பண மோசடியில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைத்தும் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை புழல் மத்திய சிறை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு என்று பிரத்யேகமாக மருத்துவர்களின் ஓய்வறை சீரமைக்கப்பட்டு புதிய கட்டில் மெத்தை மின் விசிறி என வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவர் முதல் வகுப்பு கைதி என்பதால் அதற்கான கட்டடத்தில் ‘லாக் அப்’ அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கேயும் கட்டில் மெத்தை மேஜை நாற்காலி போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 12 வரை 5 நாட்கள் காவலில் விசாரித்தனர். அப்போது அவர் உடல் ஆரோக்கியமாக இருந்தார் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு ஏற்ப காவல் விசாரணை முடிந்து செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதும் மாடிப்படிகளில் இறங்கி வந்தார். இதனால் சிறை விதிகளின் படி செந்தில் பாலாஜி முதல் வகுப்பு கைதிக்கான லாக் அப் பில் அடைக்கப்படுவார் என கூறப்பட்டது.
ஆனால் அவர் தொடர்ந்து புழல் சிறை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எத்தனையோ எதிர் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் ஆளும் விடியல் அரசு அவரை வசதியா வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டுவது ஏன் ? அமைச்சருக்கு ஒரு சட்டம் , சாமனியனுக்கு ஒரு சட்டமா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் கேட்கப்பட்டு வருகின்றன….