அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் அது அவர் எடுத்த பிரமாண விதி மீறல் ஆகும் எனக் கூறி அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஓட்டு அரசியலுக்காகவும் தங்களது கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிக்காகவும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. அதிலும் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் போலியான வாக்குறுதி ஒன்றைக் கொடுத்தார். அதாவது ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்வோம். அதற்கான ரகசியம் எங்களிடம் மட்டுமே இருக்கிறது என்று வாய் கூசாமல் பொய்யை அள்ளி வீசினார். ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முடிவடையப் போகிறது. ஆனால் நீட் ரத்து செய்யும் ரகசியம் பற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பதில் தான் இன்னமும் வரவில்லை..
இதற்கிடையில் நீட் தேர்வை ரத்து செய்யாமல் இருப்பதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் மாநிலம் முழுவதும் வருகின்ற 20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘அரசியலமைப்பு சட்டம் 164 (3)ன்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரமாணத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் அது Breach Of Oath.
உச்சநீதிமன்றம் நீட் தேர்வு செல்லும் என தீர்ப்பளித்துள்ள நிலையில் உண்ணாவிரதம் இருப்பது நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்.’’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் உண்ணாவிரதத்தில் உதயநிதி கலந்து கொள்வாரா, கலந்து கொண்டால் அவரது அமைச்சர் பதவி எம்எல்ஏ பதவி என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது