திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டு வாங்வது அவர்களின் வேலையாக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
என் மண், என் மக்கள் யாத்திரை பயணம் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதியில் நேற்று நடைபெற்றது. சுவாமியார் மடத்தில் காலையில் நடைபயணத்தை துவக்கிய அண்ணாமலை மணலி ஜங்சனில் நிறைவு செய்தார்.
பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது: பத்மநாபபுரம் எம்.எல்.ஏ.வாக மலை முழுங்கி மனோதங்கராஜ் உள்ளார். குமரி மண்ணில் இருந்து மலையை வெட்டி 600 லாரிகள் மூலமாக தினமும் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தி செல்லப்படுகின்றன.
சட்டவிரோத குவாரி மூலம் மலையை வெட்டிச் செல்வதால் இயற்கை தனது தன்மையை இழந்து வருகிறது. கனிம வள கடத்தலுக்கு எதிராக தமிழக அரசு கடந்த ஜூலை 23ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது.
இதன் பின்னர் கனிமவளம் கேரளாவுக்கு கட்டத்தி செல்லப்படாது என்றார் மனோ தங்கராஜ். ஆனால் சிலரை தூண்டிவிட்டு லாரி உரிமையாளர்கள் சார்பில் வழக்கு போட்டு உயர்நீதிமன்றத்தில் தடை போட்டார்கள். செந்தில் பாலாஜியை விசாரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் போய் மணிக்கு ரூ.10 லட்சம் கொடுத்து வாதாட வக்கீல் வைத்தார்கள். அதே போன்று கனிமவள கடத்தலை தடுக்க ஏன் மனோ தங்கராஜ் உச்ச நீதிமன்றத்துக்கு போகவில்லை ? பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலைடையும் ஆட்டிவிடும் செயல் இது!
முதலமைச்சர் ஸ்டாலின், தங்கள் ஆட்சி அமைந்தால் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடு கட்டிக்கொடுப்பேன் என்றார். என்னவாயிற்று ? நான் இன்று செங்கல் கொண்டுவரவில்லை. தங்கள் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டுவாங்குவதற்கு திமுக அரசியல் நடத்துகிறது,” இவ்வாறு அவர் கூறினார்.