தேச ஒற்றுமைக்காக வில்லிவாக்கம் சிவன் கோவிலில் மண் எடுக்க சென்ற பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட 63 பேரை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா சார்பில் ‘என் மண், என் தேசம் ” என்ற திட்டத்திற்காக வில்லிவாக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஒரு பிடி மண் எடுப்பதற்காக பாஜவினர் வந்தனர். அப்போது பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட 50க்கும் அதிகமானோர் கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர்.
அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜவினருக்கும், போலீசாருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. எதற்காக கோவில் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்ற கேள்வியை பாஜகவினர் முன்வைத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன் பின்னர் பாஜகவினர் 63 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி வினோஜ் செல்வம் மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் கூறியதாவது: தேச ஒற்றுமைக்காக புதிய நாடாளுமன்ற கட்டடம் அருகாமையில் மாபெரும் வனப்பகுதியை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, புனிதமான கோவில்களில் இருந்து மண் எடுத்து அனுப்பப்படுகிறது.
அதே போன்று வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் மண் எடுப்பதற்கு முயன்றோம். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்படுவீர்கள் என எங்களை எச்சரித்தனர்.
கோவில்களில் சிலைகளை திருடிச் செல்வோர் மற்றும் ஆற்று மணலை அள்ளுவோரை சுதந்திரமாக சுற்ற விட்டுவிட்டு, புனிதமான செயலுக்கு மண் எடுத்தால் அதற்கு தடை செய்கின்றனர். கோவிலுக்காக செல்பவர்களை கைது செய்யும் கேவலம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
திமுக அரசை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். எங்களை கைது செய்வதால் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு புனிதமான காரியத்துக்கு, திருக்கோயில்களில் இருந்து, மண்ணெடுத்து செல்வது எல்லா மாநிலத்திலும் நடைபெறுகிறது. ஆனால் இந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் திமுக அரசு ஆட்சியில் உள்ள தமிழகத்தில் மட்டும் அது மறுக்கப்படுகிறது. இந்து விரோத ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்றனர் பாமர வாக்காளர்கள்.