சிலருக்கு படத்தின் கீழேயுள்ள இரு படங்களில் ஒன்றிலிருப்பவரைத் தெரியாமலிருக்க வாய்ப்புண்டு என்பதால், ஒரு சிறுகுறிப்பு வரைவதில் பாதகமொன்றுமில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி ‘ தேசிய மருத்துவர் தினம்’ என்று அனுஷ்டிக்கப்படுகிறதே; அது படத்தில் இருக்கிற டாக்டர் பிதான் சந்திர ராய் (அ) டாக்டர் பி.சி.ராயின் பிறந்த நாளாகும். இவர் பெயரில் மருத்துவர்களுக்கு பி.சி.ராய் விருதுகள் வழங்கப்படுவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்! தேர்ந்த மருத்துவர் என்பதோடு, மே.வங்கத்தின் மேயராகவும், பின்னாளில் முதலமைச்சராகவும் பணியாற்றியவர் டாக்டர் பி.சி.ராய்! காங்கிரஸ் என்ற சகதியில் மலர்ந்த விரல்விட்டு எண்ணத்தக்க செந்தாமரைகளில் அன்னாரும் ஒருவர்!
மீதமுள்ளவர்களை அடையாளம் தெரியாதவர் இப்பூதலத்தில் இருக்கவும் வாய்ப்புண்டோ? ஆக, நால்வரது அறிமுகமும் ஆயிற்று; கதைக்குச் செல்வோம்!
கதை கச்சத்தீவுடன் தொடர்புடையது!
திருமதி சிரிமாவோ பண்டாரநாயக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் பேசிய ஒரு பேரத்தின் விளைவாக, கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குத் தாரை வார்த்தது. அதாவது ‘சீனா அல்லது அமெரிக்காவுடன் நாங்கள் நட்புறவு கொள்ளாமலிருக்க வேண்டுமென்றால், அந்த தம்மாத்துண்டு கச்சத்தீவை கொடுத்து விடுங்கள். பிறகு, இந்தியாவுடன் நாங்கள் லா..லா..லாவென்று டூயட் பாடி எங்களது ஆயுளைக் கழிக்கிறோம்,’ என்று திருமதி பண்டாரநாயக சொல்லவும், அண்டை வீட்டுக்கு அவசரத்துக்கு சர்க்கரை கொடுப்பது மாதிரி, திருமதி இந்திரா காந்தி கச்சத்தீவைக் கொடுத்தார் என்பதை அவனி அறியும். அப்போதைய தமிழக முதல்வர் யாரென்பதும் தமிழ்கூறும் நல்லுலகத்தோர் நன்கறிவர்! அன்னார் ‘அதெப்படி எங்களைக் கேட்காமல் இப்படிச் செய்யலாம்? இதை நாங்கள் கண்டிக்கிறோம்,’ என்று ஒரு தீர்மானத்தை சட்டசபையில் இயற்றினார். இது நடந்தது 1974-ல்.
அப்படியொரு தீர்மானத்துக்கு இந்திரா காந்தி அம்மையார் எவ்வளவு பயந்தார் என்பதை அறிய வேண்டுமா? 76-ல், கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்ற இன்னொரு ஒப்பந்தமும் போட்டார். குதிரை குப்புறத்தள்ளினதும் இல்லாமல்…பழமொழி நினைவுக்கு வருகிறதா? ஆனால், அப்போது, நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, திமுக அரசு கலைக்கப்பட்டிருந்தது. கட்சி சார்பாக ஒரு சம்பிரதாயமான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அம்புட்டுத்தேன்! பிறகு…?
‘ நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக,’ என்ற ஆலாபனை ஆரம்பித்தது. அதன் பிறகு எத்தனை தடவை இங்கே திமுக ஆட்சி, எத்தனை முறை மத்தியில் கூட்டணியில் பங்கு, எத்தனை அமைச்சர்கள் என்ற கணக்கெல்லாம் டாஸ்மாக்கருகே சாக்கடையில் குப்புற விழுந்துகிடக்கிற குடிமக்களுக்கே தெரியும் என்பதால், நிதானிகளுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை.
இந்த இடத்தில்தான் டாக்டர்.பி.சி.ராய் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.
1950-ல் மாமா நேருவுக்கு ஒரு தாராள சிந்தனை ஏற்பட்டது. அதாவது, தற்போதைய மே.வங்கத்தின் ஒரு பகுதியான பேருபரியை, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு தானமாக வழங்கி விடலாம் என்பதே அது! (எவன் அப்பன் வூட்டுச் சொத்து!). அதன்படியே, அதை ‘சர்ச்சைக்குரிய பகுதி’ என்று பிரகடனம் செய்து, நைஸாக பாகிஸ்தானுக்கு வழங்க முடிவு மேற்கொள்கிறார் நேரு மாமா! ( இவிடம் நேரு மாமா என குறிப்பிடுவது சாச்சா நேரு என்பதன் சாட்சாத் மொழிபெயர்ப்பு என அறிக!)
அப்போது மே.வங்கத்தின் முதல்வராக இருந்தவர் டாக்டர். பி.சி.ராய்! பக்கா காங்கிரஸ்காரர்! காங்கிரஸ் கட்சி முதல்வர்! ‘சரி, நேரு பிரதமர்! கட்சியின் தேசிய முகமாக இருப்பவர்: அவரிடம் போய் எதற்கு நொறண்டு பிடிப்பது? போனால் போகட்டும்,’ என்று விடவில்லை மனிதர்.
ஒரு காங்கிரஸ் முதல்வர், ஒரு காங்கிரஸ் பிரதமரின் முடிவை ஆட்சேபித்ததோடு நில்லாமல், உச்சநீதி மன்றத்தை அணுகி சட்டபூர்வமாக பிரச்சினையை எதிர்கொண்டார். ”பேருபரி இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம்; அதனை வேறோர் நாட்டுக்கு கொடுப்பதென்றால், அது குறித்து பாராளுமன்றத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,’ என்று மனு கொடுத்தார். விளைவு?
“ஆம்! டாக்டர்.பி.சி.ராய் சொல்வது 100% சரி! பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் நம் நாட்டின் ஒரு பகுதியை வேறோர் நாட்டுக்குக் கொடுக்க முடியாது,’ என்று உச்சநீதி மன்றமும் தீர்ப்பு வழங்கியது.
— இப்படியும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர்கள் இருந்தார்களா என்று கேட்கிறீர்களா? பொறுமை! அதற்கு திருஷ்டி கழிப்பதுபோல, அடுத்த மே.வங்க முதல்வராக வந்தவர் சித்தார்த் சங்கர் ராய்! அவசர நிலைப் பிரகடனத்தில் அவரது பங்கு என்ன என்பதை ஈரேழு பதினாலு லோகமும் அறியும்.
– இந்த டாக்டர்.பி.சி.ராய் தன் சொந்தக்கட்சியைச் சேர்ந்த பிரதமரையே எதிர்த்தாரா? எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து ஜெயித்தாரா? ஜெயித்து நம் நாட்டின் ஒரு பகுதி இன்னொரு நாட்டுக்குப் போக விடாமல் பாதுகாத்தாரா?
அதே மாதிரி இங்கே ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகவில்லை. ‘ஐயா நீதிமான்களே, 50-ல் டாக்டர்.பி.சி.ராய்க்கு வழங்கிய தீர்ப்பை முன்மாதிரியாக வைத்து, எங்களது கச்சத்தீவை காப்பாற்றித் தாருங்கள்,” என்று ஒரு மனு கூடவா போடவில்லை – என்று கேட்கிறீர்களா?
இதைத்தான் பாராளுமன்றத்தில் மோதிஜி மறைமுகமாக கேட்டார். அன்று அவர் கேட்ட கேள்விதான் குளவியாகக் கொட்டி, இன்று இராமநாதபுரம் நிகழ்ச்சியில் ஸ்டாலினை கோபம் கொப்பளிக்க வைத்திருக்கிறது.
கத்திப் பேசினால், சவால் விட்டு பேசினால் உண்மை மாறி விடாது. இன்று ஆவேசமாக பேசும் ஸ்டாலின், கச்சத்தீவு தரைவாக்கப்பட்ட பிறகு எத்தனை முறை காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்திருக்கிறது என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும் ?
மக்கள் ஏமாளிகள் அல்ல, அவர்களுக்கும் வரலாறு தெரியும்! இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிந்து கொள்வது நல்லது.