இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் அவதூறாக பதிவிட்ட நிலையில் அவர் மீது இந்து அமைப்பு ஒன்று கொடுத்த புகாரில் கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் அடுத்த மைல் கல்லாக சந்திரயான் 3 விண்கலம் பார்க்கப்பட்டு வருகிறது. நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்புக்கு மத்தியில் உருவானதுதான் சந்திரயான் 3 விண்கலம்.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில், நிலாவில் ஒருவர் டீ போடுவதாக கேலிச்சித்திரம் ஒன்றை ட்விட் செய்திருந்தார். அதில் ‘முக்கியச் செய்தி: வாவ்.. விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் இருந்து வரும் முதல் படம்’ எனப் பதிவிட்டிருந்தார்.
இவரது பதிவுக்கு இந்திய மக்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். உலகமே இன்று சந்திரயான் 3 விண்கலத்தின் தரையிறங்குவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் தேவையின்றி நமது நாட்டின் விஞ்ஞானிகளை அவமதிக்கின்ற வகையில் கேலிச்சித்திரம் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக நெட்டிசன்கள் “நீங்கள் தனிப்பட்ட விதத்தில் வேறொரு அரசியலைச் சார்ந்தவராக இருக்கலாம். அதற்காக அறிவியல் விஞ்ஞானிகளை வெறுப்பது, அவர்களின் பணியைக் கேலி செய்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பனஹட்டி என்ற காவல் நிலையத்தில் இந்து அமைப்பான ஸ்ரீ ராம் சேனை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். உடனடியாக நடிகர் பிரகாஷ் ராஜை கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ள நிலையில், நேற்று (ஆகஸ்ட் 22) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருவதை காணமுடிகிறது.