மதுரை: லக்னோவில் இருந்து வந்த சுற்றுலா ரயில் மதுரை ரயில் நிலையம் போடி லைனில் நிறுத்தப்பட்டிருந்த போது தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கலெக்டர் சங்கீதா ஆறுதல் தெரிவித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
கடந்த ஆக., 17 ல் உ.பி., மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிக பயணமாக 60க்கும் மேற்பட்டோர் தமிழகம் வந்தனர். ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு சென்ற அவர்கள் கடைசியாக நேற்று திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3:45 மணியளவில் மதுரை வந்துள்ளனர். புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அவர்கள் மதுரை வந்துள்ளனர். அவர்கள் வந்த இரண்டு ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கனெக்டிங் ரயில் மூலமாக நாளை அவர்கள் சென்னை செல்ல இருந்த நிலையில் அந்தப் பெட்டிகள் தனியாக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று அதிகாலை 5:15 மணியளவில் தீப்பிடித்துள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் சிலர் சட்டவிரோதமாக கொண்டு வந்த சிலிண்டரை பயன்படுத்தி தேநீர் தயாரிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்தது. தீ மளமவென பரவ பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். 55 பேர் உயிர் தப்பி உள்ளனர். சமையல் செய்வதற்காக ரயில் பெட்டியின் ஒரு புறம் உள்ள கதவில் உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. இதனால், பயணிகள் உடனடியாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.
மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படட்டுள்ளது. ரயிலில் எரியும் அல்லது வெடிக்கும் பொருட்களை எடுத்து செல்வது சட்டப்படி குற்றம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், மதுரை ரயில் நிலையத்தில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பத்து பேர் பலியான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.