விக்ரம் (லேண்டர்) கால்பதித்த பகுதியை ‘சிவ  சக்தி’ என அழைப்போம்: பிரதமர் நரேந்திர மோடி!

நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பகுதியை இனிமேல் ‘ சிவ சக்தி ‘  என்று அழைப்போம். சந்திரயான் -3 திட்டத்தில் பெண்கள் பங்களிப்பு மிக அதிகம். எனவே சிவ சக்தி என்று அழைப்பதே சால சிறந்ததாகும் என பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திந்து பாராட்டியபோது குறிப்பிட்டார்.சந்திராயன் – 3 நிலவில் தரையிறங்கியதை தென் ஆப்ரிக்காவின் ஜொகன்ஸ்பெர்க் நகரில் இருந்து கண்டு களித்த பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு கிரீஸ் நாட்டுக்கு சென்று விட்டார். அங்கிருந்து தலைநகர் டெல்லிக்கு திரும்பாமல், வெற்றி பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக நேரடியாக இன்று காலை பெங்களூர் வந்து சேர்ந்தார். 

இன்று காலை பெங்களூர் இஸ்ரோ மையத்துக்கு சென்ற பிரதமர் கடுமையாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து,  தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அப்போது பிரதமரை இஸ்ரோ தலைவர் சோம்நாத் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தென்னாப்பிரிக்கா சென்றிருந்தாலும் எனது மனம் முழுவதும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே இருந்தது. இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவை தொட்ட தருணம் மறக்கவே முடியாது.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவை ஆய்வு செய்வதற்கு புதிய வாசல்கள் திறந்துள்ளது. உலக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா தலைமையேற்கும். இந்திய விஞ்ஞானிகளை உலகமே வியந்து பார்க்கிறது. நிலவில் யாரும் செய்யாத சாதனையை நாம் அனைவரும் இணைந்து போராடி சாதித்துள்ளோம். சுதந்திர இந்தியாவின் அடையாளமான அசோக சின்னம் நிலவில் பதிக்கப்பட்டு வருகிறது.

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை சிவ சக்தி என்று அழைப்போம். இமயம் முதல் குமரி வரை இந்தியாவை இணைக்கும் தாரக மந்திரமாக சிவ சக்தி உள்ளது. பூமி என்பது பெண் சக்தியின் அடையளமாக திகழ்கிறது. சந்திரயான் -3 திட்டத்தில் பெண்கள் பங்களிப்பு மிக அதிகம் இருப்பதால், சிவ சக்தி என்று அழைப்பதே சால சிறந்ததாகும்.

சந்திரயான் 3 திட்டம் வெற்றியை கண்டு எனது மனம் பூரித்துப்போய் உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். நிலவின் ரகசியங்களை கண்டறிவோம். விஞ்ஞானிகளின் கடின உழைப்பிற்கு நான் தலைவணங்குகிறேன். நமது நாட்டின் பெருமையை உலகிற்கே நாம் நிரூபித்துள்ளோம்.

நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தடம் பதித்த ஆகஸ்ட் 23ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடுவோம். விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விண்வெளி தொழில்நுட்பம் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வானியல் ஆராய்ச்சியில் இந்தியா மிக நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.

இந்திய இளைஞர்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தட்டி எழுப்பி இருக்கின்றனர். கடந்த 2019ல் சந்திரயான்-2 நிலவில் தனது தடத்தை பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top