ஹிந்துக்கள் பற்றி தவறாக பேசும் அமைச்சர் பொன்முடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வலியுறுத்தியுள்ளார்.சமீபத்தில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, நந்தனார் வரலாற்றைத் திரித்து, நந்தனார் முறையிட்டும் சிவபெருமான அவரை அழைக்கவில்லை என்று பேசி இருந்தார்.
இது தொடர்பாக பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; ஹிந்து விரோதம் என்பது திமுகவிற்கு இரத்தத்தில் ஊறிய ஒன்று என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது.
தங்கள் வசதிக்கு ஏற்றவாறு நந்தனார் வர்லாற்றை அமைச்சர் மாற்றி பேசியதே சமீபத்திய உதாரணம்.
நந்தனார் வேண்டுகோளுக்கு இணங்க திருபுங்கூர் கோவிலில் நந்தி நகர்ந்தது வரலாறு.
பின்னர் சிவபெருமானே நந்தனரை சிதம்பரம் அழைத்து, அங்கிருந்த ஊர் தலைவர்கள் கனவிலும் சிவன் தோன்றி, அவரை சகல மரியாதையுடன் கோவிலுக்கு அழைத்து, அவர் கருவறைக்குள் நுழைந்து ஜோதியுடன் ஐக்கியமானது தான் தல வரலாறு.
ஆனால், இதெல்லாம் எதுவும் அறியாமல், வெறும் ஹிந்து வெறுப்பு என்ற ஒற்றை குறிக்கோளுடன் பேசி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி.
திடீர் என்று தாழ்த்தப்பட்ட மக்களின் காவலனாக நடிக்கும் இவர்கள் யார் என்று பாருங்கள்.
மேடையில் ஒரு பெண்ணை பார்த்து, நீ ஓசி தானே என்று கூறியவர்கள், நீங்கள் எல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா என்று ஏக வசனம் பேசியவர்கள்.
ஆனால் வெளியே சமூக நீதி வேஷம் போடுவதற்கு ஹிந்து மத வரலாற்றையே மாற்றி பேசுகிறார்கள்.
ஒரு நொடியில் உலகம் முழுக்க இருக்கும் விஷயத்தை தெரிந்துக்கொள்ள கூடிய இந்த தகவல் தொழில் நுட்ப காலகட்டத்திலேயே இப்படி வாய்க் கூசாமல் பொய் வரலாற்றை பேசுகிறார்கள் என்றால், இவர்களது தொடக்க காலத்தில் இன்னும் என்னவெல்லாம் பொய்யை பிழிந்து பிழிந்து எழுதி இருப்பார்கள்.
தங்களுடைய சுய நல அரசியலுக்காக, ஹிந்து மத வரலாற்றை திரித்து பேசியும் அவமதிப்பும் செய்த அமைச்சர் பொன்முடி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.