காங்கிரஸ், திமுக கூட்டணி அரசுதான் நீட் தேர்வை கொண்டு வந்தது, எனவே நீட் பிரச்சினைகளுக்கு அவையே காரணம் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறியுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் பாஜக கல்வியாளர் பிரிவு சார்பில் நீட் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் பேசியதாவது: 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசுதான் நீட் தேர்வை கொண்டு வந்தது. இருப்பினும், நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக நீட் தேர்வை ஆதரிக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதியை தமிழக மக்களிடம் அளித்தது. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு அளிக்கப்பட வாய்ப்பு இல்லை.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தொழில் கல்விக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுக அரசியல் லாபத்துக்காக தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது.
இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு மோடி அரசு திட்டமிட்டுள்ளது. 9 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை. வெளிப்படையான நேர்மையான ஆட்சி நடந்து வருகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்பார். விரைவில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில கல்வியாளர் பிரிவுத் தலைவர் தங்க கணேசன், பாஜக மத்திய மேற்கு மாவட்ட தலைவர் என்.தனசேகரன், கல்வியாளர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ஜி.வி.ஜெயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.