தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கமலாலயத்தில் இன்று, ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ 2-ம் கட்ட பாதயாத்திரையை செப்டம்பர் 4-ம் தேதி (திங்கட்கிழமை) தென்காசியில் தொடங்குவதற்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட யாத்திரை செப் 29-ம் தேதி கோவை சிங்காநல்லூரில் முடிவடைகிறது.
மேலும் கூட்டத்தில் சந்திரயான்-3 வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. அது போல, இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200, உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூ.400 குறைக்கப்பட்டது. இது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய பரிசாகும்.
தேர்தலை கருதாமல், தேவையறிந்து குடும்ப உறுப்பினரை போன்று தேசத்தின் குடும்பங்களுக்கு இன்பத்தை வாரி வழங்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தாய்மார்கள் சார்பில் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.