பாரதப் பிரதமர் மோடி அவர்களால் சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்ட “என் மண் என் தேசம்” பிரச்சாரப் பேரியக்கத்தினை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், காட்டாங்குளத்தூரிலுள்ள நினகரை கிராமத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (செப்டம்பர் 1) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்திற்கான தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பொங்குலெட்டி சுதாகர் ரெட்டி முன்னிலை வகித்தனர்.
தாமரை பத்திர விருது பெற்றவரும், ஸ்ரீ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரருமான ஸ்ரீ.நடேச நாயக்கர் அவர்களின் இல்லத்திற்கு சென்று, அவரது படத்திற்கு மலரஞ்சலி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினரை பாராட்டினார் பாஜக தலைவர்கள். அதைத் தொடர்ந்து அவர்களது வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் இருந்து புனித கலசத்தில் மண் சேகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக டாக்டர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில்: டெல்லியில் கர்தவ்ய பாதையில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கை அடைவதற்கான அர்ப்பணிப்பின் அடையாளமாக செயல்படும் “அமிர்த வாடிகா” என்ற தோட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த என் மண் என் தேசம் இயக்கம். இதற்காக பாஜக கார்யகர்த்தாக்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித மண்ணும், மண்ணோடு கூடிய செடிகளும் பூங்காவில் அங்கம் வகிக்கும் என்று கூறினார்.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிவானந்த குருகுலம் சென்று மாணவர்கள் மற்றும் முதியோர்களை சந்தித்தனர் பாஜக தலைவர்கள். குருகுலத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை மரக்கன்றுகள் நட்டார். பின் பள்ளி மாணவர்களுடன் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, தான் கல்வி கற்ற அனுபவங்களையும் என் மண் என் தேசம் திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி பற்றியும் எடுத்துக் கூறினார்
டாக்டர் சுதாகர் ரெட்டி பேசுகையில், ‘‘என் மண் என் தேசம்’’ திட்டத்தின் நோக்கம், இந்தியாவின் சுதந்திரம் நோக்கிய பயணம் மற்றும் தேச விடுதலை வீரர்களின் வீர தீரங்களை நினைவுபடுத்துவதாகும். இந்த திட்டமானது ஸ்ரீ நரேந்திர மோடி ஜியின் ஆற்றல்மிக்க, தொலைநோக்கு தலைமையின் கீழ், மாணவர்கள் மனதில் தேச உணர்வை நிலைநாட்டி, அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இந்தியாவின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் என்றார்.
மேலும், இந்த நிகழ்ச்சி அக்டோபர், 2023 இறுதி வரை தொடரும். இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஜி, அவர்கள் கர்தவ்ய பாதையில், அமிர்தா வாடிகாவில் உரையாற்றுவார், என்று சுதாகர் ரெட்டி கூறினார்.