நெல்லையில் பா.ஜ.வினர் என நினைத்து பொது மக்களை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புு தெரிவிக்கவே அவர்களை போலீசார் விடுவித்துள்ளனர்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு செப்டம்பர் 10க்குள் பதவி விலக வேண்டும். இல்லை என்றால் அறநிலைய துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதன்படி நேற்று (செப்டம்பர் 11) தமிழகம் முழுதும் பா.ஜ.க சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. நெல்லை மண்டல அறநிலைய துறை இணை ஆணையர் அலுவலகம் அருகே பா.ஜ.வினர் காலையில் திரண்டிருந்தனர். போலீசார் குவிக்கப்பட்டு, இணை ஆணையர் அலுவலகம் இருந்த பகுதி நோக்கி செல்வதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. வாகனங்களில் செல்பவர்களை திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதே நேரத்தில் அப்பகுதி வழியாக நெற்றியில் திருநீறு பட்டை, குங்குமத்துடன் வந்தவர்கள் பலரையும் போலீசார் பிடித்து வைத்தனர். அப்போது பாஜகவினரை கைது செய்து வேனில் ஏற்றியபோது திருநீறு வைத்திருந்தவர்களையும் போலீசார் வேனில் ஏற்றினர்.
இதை கண்ட பா.ஜ.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் அரசியல் ரீதியில் போராடுகிறோம். எங்களை கைது செய்வது மரபு, நியாயமும் ஆகும். ஆனால் நெற்றியில் திருநீறு குங்குமம் வைத்திருப்பவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது. அவர்களை விடுவிக்கப்படவில்லை என்றால் அதற்கு ஒரு போராட்டம் துவங்கும் என எச்சரித்தனர். இதன் பிறகே திருநீறு பட்டை மற்றும் குங்குமம் வைத்திருந்தவர்களை போலீசார் விடுவித்தனர்.
திமுகவினருக்கும் அதற்கு துணை போகும் போலீசாருக்கும் திருநீறு என்றால் பிடிக்காதா? ஏன் இது போன்ற அட்டூழியங்களில் ஈடுபடுகின்றனர். இது போன்ற அராஜகம் திமுக ஆட்சியில் மட்டுமே நடக்க முடியும் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.