திமுகவின் கபட நாடகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது: அண்ணாமலை!

திமுகவின் கபட நாடகம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று ( 12.09.2023) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

திமுக ஆதரவோடு, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறி நடந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு பெரும் திரளாகக் கூடி, சனாதன தர்மம் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், தமிழக பாஜக தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், காவல்துறையின் கைது நடவடிக்கைகளைக் கண்டு பின்வாங்காமல் நமது தர்மத்தை அவமதித்தவர்களை எதிர்த்து அனைவரும் உணர்வுடன் போராடியது, ஆட்சியில் இருக்கும் திமுகவை அசைத்திருக்கிறது. சனாதன தர்மம் வேறு, இந்து மதம் வேறு என்று புதிய விளக்கம் கொடுத்து, நாங்கள் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை என்று சமாளிக்க முயற்சிக்கிறார்கள்.

அமைச்சர் உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய அதே கூட்டத்தில், அவருக்கு முன்பு பேசிய திக தலைவர் வீரமணி, சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றுதான்    என்று பேசினார். தற்போது மத வேறுபாடின்றி, பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததும், வேறு வழியின்றி ஏதேதோ, மாற்றிப் பேசி மடைமாற்ற முயற்சிக்கிறார்கள். இந்து என்றால் திருடன் என்று வசைபாடி விட்டு, பொதுமக்களிடம் இருந்து பலமான எதிர்ப்புக் குரல் வந்ததும், உள்ளம் கவர்ந்த திருடன் என்று கூறியதாக நீதிமன்றத்தில் பூசி மெழுகிய கருணாநிதி வழிவந்தவர்கள்தானே! இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக இருக்கும் சேகர்பாபு, இந்து சமயத்தை ஒழிப்போம் என்று கூறிய கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம், அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். 

பல நூற்றாண்டுகளாக, நம் சமூகம் ஆன்மீகம் சார்ந்த சமூகமாகவே விளங்கி வருகிறது. மிகவும் தொன்மையான நாகரிகம் கொண்ட சமூகம் நம் சமூகம். அந்த நாகரிகத்தின் மேன்மையையும், தமிழர்கள் வாழ்வியலையும் நம் பக்தி இலக்கியங்கள் உலகமறியச் செய்து கொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகள் பல உருவாகும் முன்னரே, நாம் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தோம். அந்த வாழ்வியலைத்தான் இவர்கள் சிதைக்கப் பார்க்கிறார்கள். எப்படி பல நாட்டின் பூர்வகுடிகள், அவர்களின் சொந்த மண்ணில் இருந்து துரத்தப்பட்டார்களோ, எப்படி பிற நாடுகளின் கலாச்சாரங்களை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்களோ, எப்படி பல நாடுகளின் தொன்மையான நாகரிங்கள் இன்று காணாமல் போய்விட்டனவோ, அப்படி ஒரு நிலையை நமக்கும் ஏற்படுத்த இவர்கள் செய்யும் முயற்சிதான், சனாதன தர்மம் வேறு, இந்து மதம் வேறு என்று பிரித்துப் பேசுவது.

சனாதன தர்மம் என்பது இந்து மதம் கூறும் வாழ்வியல். சனாதன தர்மத்தில் அனைத்து உயிர்களுமே சமம் என்பதாகத்தான் இருக்கிறது. இதையேதான் திருக்குறள் உள்ளிட்ட அனைத்து பக்தி இலக்கியங்களும் கூறுகின்றன. யாரோ சிலர், தவறான சில வழக்கங்களை உருவாக்கிப் பின்பற்றியிருந்தாலும், அவற்றை நேர்செய்து, வழக்கிலிருந்து அவற்றை விலக்குவதும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள்தான். சனாதன தர்மம் யாருக்கும், எந்த நம்பிக்கைகளுக்கும் எதிரான அல்ல. எல்லா நம்பிக்கைகளிலும் உள்ள நிறைகளை ஏற்றுக் கொண்டு, அதற்கான இடம் கொடுப்பதே சனாதன தர்மம், சனாதன தர்மத்தில் ஏற்றத் தாழ்வுகளுக்கு எப்போதும் இடம் இல்லை. மனிதர்கள் சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டு மொத்த இந்து சமயத்தையே குறை சொல்வது நமது நாகரிகத்தையும், கலாச்சாரங்களையும், விஞ்ஞான அறிவையும் எப்படியாவது சிதைத்து விட முடியாதா என்ற சிலரின் ஏக்கமே தவிர வேறொன்றுமில்லை.

உலகம் தட்டையானது என்று பிற நாட்டவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் உருண்டை வடிவானது என்பதை, நமது தெய்வங்களின் உருவங்களில் வடிவமைத்தவர்கள் நாம். விஞ்ஞானத்திலும், வான சாஸ்திரத்திலும் பிற நாடுகள் இன்று கண்டுபிடிப்பதை, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தவர்கள் நாம், இயற்கையின் ஒவ்வொரு படைப்பையும், இறைவடிவாக வழிபடுபவர்கள் நாம். முன்னோர்களை வழிபடுபவர்களை நாம். 

சனாதன தர்மத்தில் சிறு தெய்வம் பெரும்தெய்வம் என்ற வித்தியாசம் இல்லை. ஆனால், திமுகவினருக்கு அப்படிப் பிரித்துக் கூற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சனாதன தர்மம் பெருந்தெய்வங்களைத்தான் வழிபடச் சொல்கிறது. சிறு தெய்வங்களைப் புறக்கணிக்கிறது என்று மக்களைப் பிரிப்பார்கள். பின்னர், சிறு தெய்வ வழிபாடுகளை ஒவ்வொன்றாகத் தடை செய்வார்கள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபடும் கோவில்களை இடிப்பார்கள். வழிபாட்டு முறைகளைத் தடுத்து நிறுத்துவார்கள். அவற்றை மூட நம்பிக்கைகள் என்று கேலி செய்வார்கள்.

இன்னொரு புறம், பெரிய கோவில்களை, இந்து சமய அறநிலையத்துறை மூலம் கைப்பற்றிக் கொண்டு, கோவில் சொத்துக்களை, கோவிலுக்குச் சொந்தமான தங்க நகைகளைத் திருடி, உண்டியல் பணத்தைக் கையாடல் செய்து, பூஜை நடைமுறைகளைப் பாழாக்கி அவற்றின் தொன்மையைச் சிதைக்கிறார்கள். பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உடைய ஆலயங்கள் கூட, முறையான பூஜைகள் நடைபெறாமல் புறக்கணிக்கப்படுகின்றன. கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து வரும் வருவாய் என்ன ஆகிறது என்பது தெரியவில்லை. கோவில் உண்டியல் பணத்தைத் திருடி, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சொகுசு வாகனங்கள் வாங்குகிறார்களே தவிர ஆலய திருப்பணிகள் செய்வதில்லை. தனிநபர் கட்டிய ஆலயத் திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத்துறையின் பெயரில் கணக்கு எழுதித் கொள்கிறார்கள்.

இவர்களது நோக்கம் இந்து மதத்தை அழிப்பதே.  ஒவ்வொரு படிநிலையாக அதைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக, மக்களிடையே பிரிவினையைத் தூண்டிக் கொண்டிக்கிறார்கள். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசும் இவர்கள் உண்மையான நோக்கம் வேறு, மக்களின் வாழ்வியலில் இருந்து சனாதன தர்மத்தையோ, இந்து மத நம்பிக்கைகளையோ பிரிக்க முடியாது என்பதை அறிந்த இவர்கள், மக்களின் வழிபாட்டு முறைகளை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் மக்களிடையே பிரிவினையைத் தூண்டுகிறார்கள் பழியை சனாதன தர்மத்தின் மீது போடுகிறார்கள்.

உதாரணமாக திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஜாதிப் பிரிவினை குறித்த செய்திகள் அதிகள் வெளிவரும். அவற்றைச் செய்பவர்களும் திமுகவினராகத்தான் இருப்பார்கள். ஆனால், சொந்தக் கட்சியினரைப் பலி கொடுத்து இவர்கள் ஆடும் நாடகம் அது. இது போல ஒரு சம்பவம் நடந்து அடுத்த நாள், திமுகவில் முதல் குடும்பத்தில் ஒருவரோ, அல்லது முக்கியத் தலைவர்களில் ஒருவரோ, ஜாதியப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற  செல்வார்கள். சனாதன தர்மத்தைப் பழிப்பார்கள். அவர்கள் சமூக நீதியின் காவலர்கள் என்பதாய் காட்டிக் கொள்வார்கள். திமுக எம்.பி கனிமொழி இன்று அதே போன்ற ஒரு நாடகம் நடத்தியிருக்கிறார். ஆனால் உண்மை என்ன? அத்தனை ஆண்டுகளும் இல்லாத பிரிவினை, திமுக ஆட்சியில் இருக்கும்போது மட்டும் ஏன் நடக்கிறது? மக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள். எழுபது ஆண்டுகளாக திமுக ஆடும் நாடகங்களைப் புரிந்து கொண்டார்கள். இனியும் இவர்கள் நாடகம் இங்கே செல்லுபடியாகாது.

நாம் எல்லா மதமும் சம்மதம் என்கிறோம். ஆனால், திமுகவினர் இந்து மதத்தைத் தவிர அனைத்து மதமும் சம்மதம் என்கிறார்கள். அதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர்தான் சனாதன ஒழிப்பு. இறுதியாக திமுகவினக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். கடவுள் இல்லை என்று ஆரம்பித்த உங்கள் கட்சி நிறுவனர் மறைந்த அண்ணாதுரை, இறுதியில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதில் வந்து நின்றார். இந்து சமயத்தை வசைபாடிய மறைந்த கருணாநிதி இந்து மதத்தைப் புண்படுத்தவில்லை என்று நீதிமன்றத்திற்குச் சென்று சொன்னார். கடந்த தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்பாக, திமுகவில் 90 சதவீத இந்துக்களே என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். சனாதன தர்மம் வேறு, இந்து மதம் வேறு என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார் பட்டத்து இளவரசர் உதயநிதி. உங்களுக்கு வேறு வழியில்லை. தேர்தலின் போது மட்டும் கோவில் கோவிலாக படியேறி நெற்றியில் விபூதி வைத்து நீங்கள் ஆடும் கபட நாடகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top