செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தததைத் தொடர்ந்து அவரைக் காப்பாற்ற அதன் மறுநாளே பல ஆவணங்களைக் கொட்டி எரித்ததாக கோவை திமுக மேயர் கல்பனாவின், தம்பி மீது வீடியோ ஆதாரத்துடன் புதிய புகார் எழுந்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதற்காக, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்தது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை பல்வேறு கட்டங்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிது.
இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை ஆகஸ்ட் 12ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், சென்னை, கோவை, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். இதனால் கூடுதல் ஆவணங்கள் கிடைக்கப் பெற்றன.
இந்த நிலையில், செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட அடுத்த நாளே கோவை திமுக மேயர் கல்பனாவின், தம்பி மற்றும் தாய் வசிக்கும் கோவை மணியகாரம்பாளையம் வீட்டுக்கு கார்களில் சில பெட்டிகள் வந்து இறங்கியுள்ளது. அதில் இருந்த முக்கிய காகித ஆவணங்களை அங்குள்ள மைதானத்தில் கொட்டி மேயரின் தம்பி குமார் எரித்துள்ளார். இது பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ பற்றி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலருக்குச் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. எரிக்கப்படாத சில ஆவணங்களின் காகிதங்களும் சேகரிக்கப்பட்டு, அவையும் இந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எரிக்கப்படாத காகிதங்களில் பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளது. காசோலை கொடுக்கப்பட்ட விபரங்கள் இடம் பெற்றுள்ளது. இது போன்ற பல தகவல்களும் அதிகாரிளுக்கு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே இவை செந்தில் பாலாஜிக்கு சொந்தமான ஆவணங்களாக இருக்கலாம் அல்லது திமுக மேயர் கல்பனா குடும்பத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விரைவில் மேயர் கல்பனாவின் சகோதரர் குமார் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.