தங்கள் மீது புகார் கொடுத்த ஒரே காரணத்திற்காக கோவை திமுக மேயர் கல்பனாவின் குடும்பம், அப்பாவி பெண்ணின் காருக்கு தீ வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு திமுகவை சேர்ந்த கல்பனா மேயராக உள்ளார். இவர் பதவியேற்றதில் இருந்து அந்த மாநகராட்சிக்கு ஏதாவது நன்மை செய்வார் என பொதுமக்கள் நம்பியிருந்தனர். ஆனால் இதுவரையில் இவர் எந்த ஒரு நல்ல செயலையும் செய்யவில்லை. அதற்கு மாறாக பொதுமக்களுக்கு இடையூறு கொடுப்பதில் அவரது குடும்பம் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி கோவை மணியகாரன் பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திரா கார்டனின் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சரண்யா – கோபிநாத் தம்பதியினர். இவர்கள் இருக்கும் குடியிருப்புக்கு அருகாமையில் திமுக மேயர் கல்பனா மற்றும் அவரது அம்மா மற்றும் சகோதரர்கள் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தங்கள் வீட்டை காலி செய்ய வைப்பதற்காக பல்வேறு விதங்களில் மேயர் குடும்பத்தினர் தொந்தரவு செய்வதாகவும் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட சரண்யா குடும்பத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அதில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது பற்றி சரண்யா கூறுகையில், தாங்கள் குடியிருக்கும் காம்பவுண்ட்டில் பக்கத்து வீட்டில் திமுக மேயர் கல்பனா ஆனந்த்குமாரின் தாயார் காளியம்மாள் மற்றும் தம்பி குமார் வசித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு குமார் தங்களிடம் 15,000 ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதில் 5000 ரூபாயை மட்டுமே திருப்பி தந்ததாகவும், மேயர் கல்பான ஆனந்த்குமார் மேயாராக பொறுப்பேற்றதில் இருந்து மீதி தொகையை தரவில்லை என கூறினார்.
இதற்கிடையே மேயர் கல்பனா ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக குமார் வீட்டில் தங்கி உள்ளார். இந்த நிலையில் தான் தாங்கள் வசித்து வரும் வீட்டை
காலி செய்ய வைக்க மேயரின் தம்பி குமார் பல்வேறு விதங்களில் டார்ச்சர் செய்கிறார்கள். தங்கள் வீட்டின் பின்னால் அழுகிய பழங்கள், கோழி இறைச்சிகள் உள்ளிட்டவற்றை குமார் வீசி செல்கிறார். அருவறுக்கத்தக்க வகையில் சிறுநீரை டப்பாவில் பிடித்து வந்து வீட்டின் சமையலறை பகுதியில் ஊற்றிச் செல்கிறார். அதுமட்டுமின்றி பூசணிக்காய், எலுமிச்சை இவற்றை கொண்டு மாந்திரிகம் போன்ற செயல்கள் செய்து வைத்து தொந்தரவு அளிக்கிறார்.
எங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியாதவாறு அவர்களது வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இவற்றையெல்லாம் கேமரா மூலம் பதிவு செய்துள்ள நிலையில் வீடியோ பதிவு செய்ததை அறிந்து குமார், சில ஆட்கள் கொண்டு மிரட்டுகிறார். எங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும். கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளோம் என சரண்யா கூறியிருந்தார்.
இந்த நிலையில், தங்கள் மீது புகார் கொடுத்ததன் காரணமாக திமுக மேயர் குடும்பம் ஒன்று சேர்ந்து சரண்யாவின் காருக்கு தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கார் பாதி தீக்கறையான நிலையில் உள்ளது. இது பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது பற்றி கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆட்சி அதிகாரம் தனது கையில் இருக்கிறது என்பதற்காக கோவை மேயர் மற்றும் அவரது குடும்பத்தினர் பொதுமக்கள் மீது வன்மத்துடன் நடந்துகொள்வது கண்டனத்திற்குரியது. சில நாட்களுக்கு முன் கோவை மேயர் கல்பனா மற்றும் அவர் தம்பி மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த சரண்யா அவர்களின் கார் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த விவகாரம் பற்றி கோவை மேயர் விசாரிக்கப்பட வேண்டும் என் வானதி சீனிவாசன் அறிக்கை விடுத்திருந்தது நினைவு கூரத்தக்கது.