முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. டெல்லியில் பாஜ மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, பாஜ தலைவர் நட்டாவுடன் குமாரசாமி சந்தித்தார். இதன் மூலம் கூட்டணி உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக பாஜ கூட்டணியில் மஜத இணையும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஏற்கனவே கர்நாடகாவில் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்கும் என பாஜ மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா கூறியிருந்தார்.
இந்நிலையில், மஜத தலைவரும், தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உருவானது. இந்த சந்திப்பின் போது கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தும் உடன் இருந்தார்.
இது தொடர்பாக பாஜ தலைவர் நட்டா வெளியிட்ட அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இணைந்து குமாரசாமியை சந்தித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் மஜத இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்கட்சியை மனமார வரவேற்கிறேன்’’ எனக்கூறியுள்ளார்.