‘சனாதன தர்மம்’ நம் டி.என்.ஏ.,வில் உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

‘‘சனாதன தர்மம், நமது டி.என்.ஏ.,வில் உள்ளது. அதை அழிக்க முடியாது. பலர் இதற்கு முன்னர் முயற்சித்து தோல்வி அடைந்துள்ளனர்,’’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற, உடுப்பி ஸ்ரீ வித்ய திஷ்ய தீர்த்த சுவாமி சனாதன உத்சவ் நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது:

சனாதனம் என்பது உலகம் முழுதும் ஒரு குடும்பம் என்பது. தமிழில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனக் கூறுவர். இன்று உலகமே சனாதன தர்மத்தை கொண்டாடுகிறது. பாரத மாதாவின் குழந்தைகளுக்கு சனாதன தர்மத்தை கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

சனாதன தர்மம் அனைவருக்குமானது. மரத்தில் லட்சக்கணக்கான இலைகள் உள்ளன. ஏராளமான கிளைகள் உள்ளன. அதேபோல் நமக்குள் ஏராளமான சம்பிரதாயங்கள் உள்ளன. ஆனால் வேர் இல்லாமல் இலைகள், கிளைகள் இல்லை. சனாதனம் என்பது வேர் போன்றது. வேர் இல்லாமல் மரம் வளர முடியாது. அதுபோல் சனாதன தர்மம் என்பது அனைத்துக்கும் அடிப்படையானது.

அனைவரும் சமம் என்பதுதான் சனாதன தர்மம். இதையே வேதங்கள் கூறுகின்றன. தமிழகம் புனிதமான பகுதி. இது சனாதனத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக கல்வெட்டுகளில் சனாதனம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் கல்வெட்டுகள், சனாதன தர்மத்தின் மதிப்பை குறிப்பிடுகின்றன. சனாதன தர்மத்தை மறுப்பவர்கள், அழிப்பதாகக் கூறுபவர்கள், இதை எப்படி அழிப்பர்? சனாதன தர்மம் நம் டி.என்.ஏ.,வில் உள்ளது. அதை அழிக்க முடியாது. பலர் முயற்சித்து தோல்வி அடைந்துள்ளனர். இன்று சிலர் சனாதனத்திற்கு எதிர்மறையான விளக்கங்களை கூறுகின்றனர். அவர்கள் சுயநலத்திற்காக சனாதனத்தை திரித்து கூறுகின்றனர்.

சனாதனத்தை உடைக்க நினைப்பவர்கள், நாட்டை பிளவுபடுத்த நினைக்கின்றனர். இதையே பிரிட்டிஷார் செய்தனர். பிரிவினையை ஏற்படுத்தினர். நாட்டை பிளவுபடுத்தினர். இதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top