பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மைப் பணி நடைபெற்றது.
தான் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் தூய்மைப் பணித் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் 9 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் குஜராத் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தூய்மை பணிகளை மேற்கொண்டார்
காஷ்மீரில் தால் ஏரியில் தூய்மை பணிகளை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா தொடங்கி வைத்தார். ஏராளமான படகுகளில் சென்றவர்கள், ஏரியில் தேங்கியிருந்த குப்பைகளை சேகரித்து அகற்றினர்
டெல்லியில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தேங்கியிருந்து குப்பைகளை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சுத்தம் செய்தார். இதேபோன்று, மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை, அக்ரஹார சாமக்குளம் ஏரியில் தூய்மை பணியை மேற்கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி, சுமார் 160 ஏக்கர் பரப்பளவு உடையது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் மூலம் பயன்பெறும் நீர்நிலைகளில் ஒன்றாகும். இந்த ஏரி நீண்ட காலமாக தூர் வாரப்படாமல் உள்ளதால், சுமார் 40 ஏக்கர் அளவுக்கு மண் மூடி, மழை நீர் கொள்ளளவு குறைந்துள்ளது.
இந்தப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை நிரப்புவதன் மூலம், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முன்னெடுப்பான, தூய்மை சேவை -மூலம், அக்ரஹார சாமக்குளத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. ஏற்கனவே இந்தக் குளத்தின் தூய்மை பணிக்கு, இந்நாள் ஜார்கண்ட் மாநில ஆளுநரும் முன்னாள் கோவை எம்பியுமான சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் 80 லட்சம் ஒதுக்கி பணிகள் மேற்கொண்டதை இங்கே நினைவு கூர்கிறேன்.
கடந்த நான்கு வருடங்களாக இந்த ஏரியில் புனரமைப்பு பணிகளைச் செய்து வரும் அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்புக்கு, தமிழக பா.ஜ., சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரும் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.