நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். சீனாவுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வழங்கி வந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
‘நியூஸ்கிளிக்’ ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய் இடம் இருந்து பணம் பெற்றதாகவும், சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவில் செய்திகளை வெளியிடுவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து, இந்நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. நியூஸ்கிளிக் நிறுவனம் ரூ.86 கோடியை பெற்றதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்லி காவல் துறையின் சிறப்பு போலீசார், நியூஸ்கிளிக் நிறுவனத்துடன் தொடர்புடைய 30 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 6 பத்திரிகையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் லேப்டாப், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு டெல்லி போலீசார் சீல் வைத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘‘விசாரணை அமைப்புகள் தங்கள் பணியை செய்கின்றன. ஆதாரம் மற்றும் புகாரின் அடிப்படையில்தான் போலீசார் இந்த சோதனையை நடத்துவார்கள்’’ என தெரிவித்துள்ளார்.
நியூஸ்கிளிக் பின்னணியை பார்ப்போம்:
நியூஸ்கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டுவந்ததாக சமூக ஆர்வலர்கள் பல முறை மத்திய அரசுக்கு புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூஸ்கிளிக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்புக் கோரி நியூஸ் கிளிக் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீதும், அதன் ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தா மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக நியூஸ்கிளிக் விவகாரத்தில் அமலாக்கத்துறை மீண்டும் பல்வேறு வகையிலான ஆதாரங்களை திரட்டி வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ‘நியூஸ்கிளிக்’ நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ‘நியூஸ்கிளிக்’ நிறுவனம் மீதான தனது விசாரணையை தீவிரப்படுத்தியது.
மேலும், நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக் கோரி அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அமலாக்கத் துறையின் மனு தொடர்பாக பதிலளிக்கக் கோரி நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கும், அதன் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான பிரபீர் புர்கயாஷ்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்தச் சூழலில் அமலாக்கத் துறை தகவல்களின் அடிப்படையில் டெல்லி போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
யார், யார் பணம் பெற்றுள்ளனர்:
ஜாவேத் ஆனந்த் (டீஸ்டா செடல்வாட்டின் கணவர்) – ₹13 லட்சம்
தமரா(டீஸ்டாவின் மகள்)- ₹11 லட்சம்
கௌதம் நவ்லகா – ₹21 லட்சம்
பரஞ்சோய் குஹா – ₹40 லட்சம்
அபிசார் சர்மா – ₹45 லட்சம்
ஊர்மிளேஷ் – ₹23 லட்சம்
இவர்கள் செய்தியாளர்கள் என்பதை விட சீனாவால் பணியமர்த்தப்பட்டவர்கள் என்றே சொல்லலாம். இந்தியாவில் இருந்துக்கொண்டு, சீனாவுக்காக வேலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தேசத்துரோகிகள் களையெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.