திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு!

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரிகள், மதுபான ஆலைகள், நட்சத்திர ஓட்டல்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட 50க்கும் அதிகமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

கடந்த 2009ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். அப்போது அவரின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது நிலையில் இது பற்றி சர்ச்சை பரவலாக எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு அதிக பணம் பெற்றது என பலவேறு  சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் ஜெகத்ரட்சகன். இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல ஆவணங்களை கைப்பற்றி ஏற்கனவே கைப்பற்றினர். 

மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். இதனால் அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 4) காலை முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது அதன் எண்ணிக்கை இன்று காலை அதிகரித்து 90க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

அதன்படி சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு கஸ்தூரிபா நகர் முதலாவது பிரதான சாலை ஆகிய இடங்களில் அவரது வீடுகள், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரேலா மருத்துவமனை, தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள ஆழ்வார்கள் ஆய்வு மையம் அலுவலகம், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டல், வேளச்சேரியில் உள்ள ஆர்க்கிட் அடுக்குமாடி குடியிருப்பு, கிண்டி கலைமகள் நகர் பாளையக்காரன் தெருவில் உள்ள நியூடெல்டா நிறுவன அலுவலகம், அடையாறு எல்.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா நகரில் உள்ள பரணி பில்டர்ஸ் மற்றும் சிகரம் ஐஏஎஸ் அகாடமி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் தீவிர சோதனை நடத்தினர். பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை உடன் அழைத்துச் சென்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top