பாரத் எனும் இந்த நாடு 5 ஆயிரம் ஆண்டுகளாக ‘‘மதச்சார்பற்ற நாடாக’’ உள்ளது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரங்க ஹரி எழுதிய நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசியதாவது: பாரதத்தில் பல்வேறு வேற்றுமைகள் இருக்கிறது. ஆனால் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றுதான் என நினைக்க வேண்டும். இது உலகத்துக்கு ஒரு பாடமாக அமையும்.
நமக்கு ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம். ஆனால் தாய்நாடு முதன்மையானது. எனவே தேச ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். இந்த பாரதம் 5 ஆயிரம் ஆண்டுகளாக மதச்சார்பற்ற நாடாக திகழ்ந்து வருகிறது.
கடைசி மனிதனும் அறிவைப் பெற வேண்டும் என்பதற்காக சன்னியாசிகள் இந்த பாரதத்தை உருவாக்கினர். அவர்கள் சன்னியாசிகள் மட்டுமல்ல. இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்டவர்கள் ஆவர். அவர்கள் இன்னும் உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். உலகத்தின் நன்மைக்காகவே பாரதம் படைக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.