மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளை உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் விடியா அரசு நிறைவேற்றியுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை விடியா அரசு நிறைவேற்றியுள்ளது. இதனால் சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்தம் வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகை புதிய மற்றும் பழைய இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களின் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், கார், டாக்சிகள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்படும்.
குறிப்பாக படுக்கையுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு 4,000 ரூபாய் வரை வரி உயர்த்தப்படுகிறது. புதிய இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி 12 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இதே போன்று, புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, இருசக்கர வாகனங்களுக்கு 375 ரூபாய், இலகுரக வாகனங்களுக்கு 2,250 ரூபாய் மற்ற வாகனங்களுக்கு 3,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட ஏழு பேர் வரை செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தற்போதுள்ள 15 சதவீத வரி, 18 சதவீதமாக உயரும். 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 20 சதவீதம் வரி வசூலிக்கப்படும்.
பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களுக்கு, ஒவ்வொரு இருக்கைக்கும் தற்போது, 50 ரூபாயாக உள்ள காலாண்டு வரி, 75 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பயணிக்க ஒவ்வொரு இருக்கைக்கும் இப்போதுள்ள வரி 100 ரூபாயிலிருந்து 125 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மற்ற பணிக்காக செல்லும்போது, ‘ஏசி’ வாகனமாக இருந்தால், ஒவ்வொரு இருக்கைக்கும் தற்போதுள்ள 600 ரூபாய், 900 ரூபாயாகவும், ‘ஏசி’ அல்லாத வாகனங்களுக்கு 500 ரூபாய் என்பது 600 ரூபாயாகவும் உயர்த்தப்படும்
புதிய இரு சக்கர வாகனம், 1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் தற்போதுள்ள 8 சதவீத வரி 10 சதவீதமாக உயரும். 1 லட்சம் ரூபாய்க்குள் மேல் உள்ள வாகனங்களுக்கு, தற்போதுள்ள 8 சதவீத வரி 12 சதவீதமாக உயர்த்தப்படும்
பழைய வாகனங்களுக்கு அதன் வாழ்நாள் ஆண்டுக்கு ஏற்றார்போல் தற்போது 5 முதல் 7.50 சதவீதம் வரை வரி உள்ளது. இது 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.
ஏழை, எளிய மக்களிடம் பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக தற்போது, அனைவரும் முதுகிலும் வரி வரைந்து, வலி ஏற்றுகிறது…தீர்வுக்கு ஒரே வழி, விரைவில் இவர்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான், என்கிறார்கள் வாகன உரிமையாளர்கள்.