ஜெயிக்க வேண்டுமென மைதானத்தில் இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போடுவதும் தப்பில்லை என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
13வது ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 14ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இத்துடன் உலகப் கோப்பை போட்டிகளில் 8 வது முறையாக பாகிஸ்தானை வென்றது. உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இதுவரை பாகிஸ்தானுடன் இந்தியா தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போட்டியன்று, மைதானத்தில் இந்திய அணியை உற்சாகப்படுத்த ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் போடப்பட்டது. அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக ஜெய் ஸ்ரீராம் எனவும், வந்தே மாதரம் எனவும் கோஷங்களை எழுப்பி இந்திய வீரர்களை உற்சாகப் படுத்தினார்கள்.
இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதால் இந்தியாவுக்கு தலைக்குனிவு என்ற கருத்தை முன்வைத்தனர். இதற்கு பாஜக மற்றும் ஹிந்து முன்னணி உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 17) கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்திப்பின் போது இதில் எந்தத் தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “ஜெயிக்க வேண்டுமென மைதானத்தில் இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போடுவதும் தப்பில்லை. இது தப்புன்னா எல்லாத்தையும் தப்புன்னு சொல்லுங்க. இது ரைட்டுன்னா எல்லாத்தையும் ரைட்டுன்னு சொல்லுங்க.
இதை அரசியலாக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் யார்? விளையாட்டை அரசியலாக பார்க்கக் கூடாதென்று நினைப்பவர்கள் இதை அரசியலாக பார்க்கக் கூடாது. இதை நீங்கள் அரசியல் பண்ணனும் என்றால் நியாயமாக அரசியல் பண்ணுங்க” என்றார்.