நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கியதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா மீது அளிக்கப்பட்ட புகாரை ஆராய மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா பரிந்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மைக் காலத்தில் மக்களவையில் மஹுவா மொய்த்ரா எழுப்பிய 61 கேள்விகளில், அதானி குழுமத்துக்கு எதிராக 50 கேள்விகளை எழுப்பியுள்ள்ளார். அவர் மக்களவையில் கேள்வி எழுப்புவதற்கு தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக வழக்குரைஞர் ஒருவர் எனக்கு கடிதம் அனுப்பினார். தொழிலதிபரிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதற்கான மறுக்க முடியாத ஆதாரத்தையும் அந்த வழக்குரைஞர் என்னிடம் வழங்கியுள்ளார். மொய்த்ராவின் செயல் உரிமை மீறலாகும்.
அவர் மக்களவையை அவமதித்தது மட்டுமின்றி, அவரின் செயல் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120 ஏ-வின் கீழ் குற்றமாகும். இது தொடர்பாக விசாரிக்க ‘விசாரணைக் குழு’ அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக ஆராய மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா பரிந்துரைத்துள்ளார்.
திரிணாமூல் எம்.பி.யை போன்று இன்னும் சில எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களை பற்றியும் விசாரணை நடத்த வேண்டும். நாட்டிற்கு எதிரான கேள்விகளை பலர் மக்களவையில் எழுப்பியுள்ளனர்.