ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் சாமி படங்கள் மற்றும் சிலைகள் இருக்கக்கூடாது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை என பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்வில் ஹிந்து கடவுள்களின் படங்கள் தான் இடம் பெறுமேயன்றி வேறு எந்த மதத்தை சார்ந்த புகைப்படம் பயன்படுத்தப்படும்? தமிழகத்தின் ஒவ்வொரு கட்டிடமும் பூமி பூஜை செய்தே கட்டப்பட்டவை என்பதை மாவட்ட நிர்வாகம் மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கும் நோயாளிகளும், மருத்துவர்களும் சாமியை கும்பிட்டு விட்டே சிகிச்சை பெறுகின்றனர், மருத்துவர்களும் அவ்வாறே சிகிச்சை அளிக்கின்றனர் என்பதை அரசு உணர வேண்டும். பூஜையில்
சாமி படம் இருப்பின் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை அரசு விளக்க வேண்டும்.
இன்று படங்களை, சிலைகளை அகற்ற சொல்லும் அரசு, பெரும்பாலான அரசிற்கு மருத்துவமனைகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட தைரியம் உள்ளதா? சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓட்டுக்காக இது போன்ற மலிவான செயல்களில் ஈடுபட்டு, மருத்துவர்களின், நோயாளிகளின், பொது மக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பதை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்.
பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கிருஸ்துவ மத பிரச்சாரகர்கள் அனைத்து வார்டுகளிலும் சென்று மத பிரச்சாரம் மற்றும் மத மாற்றத்தில் ஈடுபடுவதை என்றேனும் இந்த ஹிந்து விரோத அரசு எதிர்த்துள்ளதா? என்பதை விளக்க வேண்டும்.
அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்வதே மத சார்பற்ற அரசு என்பதற்கு பொருள்; மாறாக, ஒரு மதத்தை அழிக்க நினைப்பது, வசைபாடுவது என்பது மதவாத அரசாகவே கருதப்படும். இந்த சுற்றறிக்கையினை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறையினர் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, முதல்வர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திருப்பூர், வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
மாவட்ட ஆட்சியர் திருப்பூர் அவர்களின் மின்னஞ்சல் நாள் 12.10.2023 கடிதத்தில் விடுத்துள்ள அறிவுறுத்தலின்படி எதிர்வரும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் எந்த ஒரு மதத்தைச் சார்ந்த சாமி புகைப்படம் / சிலை வடிவில் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் ஏதேனும் சாமி புகைப்படம் / சிலைகள் இருப்பின் எதிர்கால பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அகற்றிவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
தனது நாத்திக நம்பிக்கையை சிறுபான்மை கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் மீது திணிக்க பயப்படும் இந்து நாத்திக திமுக அரசு இந்துக்கள் மீது மட்டும் திணிப்பது யாருக்காக என்று கேள்வி எழுப்புகின்றனர் இந்து ஆன்மிக அன்பர்கள்… மீண்டும் மீண்டும் தன்னை இந்து விரோத அரசாக வெளிக்காட்டி வரும் திமுகவிற்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!