இஸ்ரேல் மீது வான், கடல், நிலப்பரப்பு என மும்முனையிலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் 7ம் தேதி பயங்கர தாக்குதலை நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் ஒழிந்திருக்கும் பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியை சுற்றி வளைத்துள்ளது. விரைவில் தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற கால அவகாசத்தை இஸ்ரேல் வழங்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா.,வுக்கான அமெரிக்க முன்னாள் தூதரும், அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளவருமான நிக்கி ஹாலே, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாலஸ்தீன மக்களை குறிப்பாக அப்பாவி மக்களை நாம் கவனிக்க வேண்டும். தற்போதுள்ள போர் சூழலை அவர்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் அரபு நாடுகளான லெபனான், ஜோர்டான், எகிப்து ஆகியவை என்ன செய்கின்றன?
எகிப்துக்கு கடந்தாண்டு பல கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளோம். அவர்கள் ஏன் தங்கள் கதவை பாலஸ்தீனியர்களுக்கு திறக்கவில்லை? ஏன் அவர்களை ஏற்கவில்லை? ஏனென்றால், ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்களுக்கு அருகில் இருப்பதை இந்த அரபு நாடுகள் விரும்பவில்லை.
அப்படியிருக்கும்போது, இஸ்ரேல் மட்டும் எப்படி தனக்கு அருகில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பதை விரும்பும்? அதனால் இந்த விஷயத்தில் நாம் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். யார் நல்லவர், யார் கெட்டவர் என்று நம்ப முடியாததால், பாலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு இந்த நாடுகள் விரும்பவில்லை.
ஆனால், தற்போது நடப்பதற்கு இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குற்றம் சொல்வார்கள். அவர்கள் நினைத்தால் இந்த பிரச்னையை தீர்க்க முடியும். பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதற்கு ஹமாஸ் அமைப்பிடம் கூற முடியும். ஹமாஸ் அமைப்பு மற்றும் அதன் தலைமையுடன் கத்தார் தொடர்ந்து இணைந்து செயல்படுகிறது.
ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் தொடர்ந்து நிதி வழங்கி வருகிறது. அதனால் இந்த அரபு நாடுகள் இந்த விஷயத்தில் அமைதியாக உள்ளனர். ஆனால் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குற்றஞ்சாட்டுகின்றன. காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதை ஹமாஸ் பயங்கரவாதிகள் விரும்பவில்லை.
அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். அந்த மக்களையே மனிதக் கேடயமாக ஹமாஸ் பயன்படுத்துகிறது. அதற்கு அந்த மக்கள் அங்கு இருக்க வேண்டும். அப்பாவி மக்களை கொல்கின்றனர் என இஸ்ரேலுக்கு எதிரான பிம்பத்தை உருவாக்க அந்த மக்கள் காஸாவிலேயே இருப்பதை ஹமாஸ் விரும்புகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய அட்டூழியங்கள், கொடுமைகளை மறக்க முடியுமா? உயிரை காப்பாற்றிக் கொள்ள பெண் குழந்தைகள் ஓடியதை மறக்க முடியுமா? தொட்டிலிலேயே குழந்தைகள் உயிரிழந்து கிடந்ததை மறக்க முடியுமா? மக்களை சாலைகளில் இழுத்து வந்து, கொடுமைப்படுத்தியதை மறக்க முடியுமா? ஆனால், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக குரல் கொடுக்கின்றனர்.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸாவில் இருந்து, ஐந்து அமெரிக்கர்களை மீட்பதற்காக, 50,000 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. ஐந்து பேருக்கே இவ்வளவு கொடுத்தால், அத்தனை பேரையும் மீட்க எவ்வளவு கேட்பர்? அமெரிக்கா வலுவாக இருக்க வேண்டும். இஸ்ரேல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இங்குள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக போன்ற கட்சிகள் ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்கின்றனர் தேசிய சிந்தனைவாதிகள்!