ஈரோட்டில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஈ.வெ.ரா.வின் வாரிசுகள் உட்பட 5,122 குடும்பங்களுக்கு பட்டா வழங்க திமுக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈ.வெ.ரா., வசித்த காலத்தில் இருந்து அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில்தான் ‘குடியரசு’ நாளிதழ் அலுவலகம் செயல்பட்டதும், அது அவரது குடும்ப வாரிசுகளின் வீடாக தற்போது இருப்பதும் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.
ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நத்தம் புறம்போக்கில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். பட்டா நிபந்தனை இல்லாத காலத்தில் இதில் பெரும்பகுதி நிலங்கள், பல்வேறு தரப்பினர் பெயரில் விற்பனை செய்யப்பட்டு, அதற்கான பத்திரங்களும் பதிவாகி உள்ளன. இந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு என்ற வகைபாட்டில் தான் உள்ளன.
ஈரோடு கருங்கல்பாளையம், மரப்பாலம், திருமகன் ஈ.வெ.ரா.சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலையில் சில பகுதிகள், புது வீதி, எஸ்.பி.ஐ., சாலை, பழைய கச்சேரி வீதி, ஜின்னா வீதி, ஆர்.கே.வி., சாலை, நேதாஜி சாலையில் குறிப்பிட்ட பகுதிகள், ‘அரசு நத்தம் புறம்போக்கு’ என்பதால் பட்டா வழங்கப்படவில்லை.
இதற்கிடையே 2020ல் பத்திரப்பதிவில் ஏற்படுத்தப்பட்ட சில விதிகளின்படி பட்டா இல்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முடியவில்லை. அதன் காரணமாக வங்கிகளில் கடன் பெறுதல் பிற அரசு பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை.
இதற்காக பட்டா பெற முயற்சித்தவர்களுக்கு, இந்த இடம் அரசு நத்தம் புறம்போக்கு என உள்ளதால் பட்டா வழங்க இயலாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021ல் ஈரோடு கிழக்கு காங்கிரஸ்- எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, சட்டசபையில் இப்பிரச்னையை எழுப்பி பட்டா வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். அவரது மறைவுக்கு பின் அத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் இளங்கோவன் அதற்கான முயற்சியை எடுத்துள்ளார்.
இதன்படி புறம்போக்கு நிலத்தில் 75 ஆண்டுகளாக வசித்து வரும் 5,122 குடும்பங்களுக்கு பட்டா வழங்க கடந்த 9ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக இளங்கோவன் சட்டசபையில் பேசுகையில், 4,000 பேருக்கு பட்டா வழங்கிய முதல்வருக்கு நன்றி. கடந்த 75 ஆண்டுகளாக போராடி கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளதாக கூறினார்.
மேலும் ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்டோர் பணியாற்றிய அந்த வீட்டில் தான் நான் இருக்கிறேன். இதுவரை பயத்தோடு தான் இருந்தேன். ஏனெனில் பட்டா கிடையாது. இன்று ஈரோடு திரும்பி செல்லும் போது தைரியமாக செல்ல முடியும் என்றார்.
ஈரோடு திருமகன் ஈவெரா சாலையில் பழைய கச்சேரி வீதியில் உள்ள, ‘குடியரசு’ இல்லத்தில் தான் கடந்த 1926களில் ஈ.வெ.ராமசாமியின் ‘குடியரசு’ நாளிதழ் அலுவலகம் செயல்பட்டது.
இந்த வீடு, அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது என்ற தகவல் வெளியான சூழலில் தான் பட்டா பெற இளங்கோவன் முயன்று அதில் வெற்றி கண்டுள்ளார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் ஈ.வெ.ரா., காலத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தான் அவர்கள் பிழைப்பு நடத்தி வந்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. குடியரசு நாளிதழ் அலுவலகமும் பின்னர் அவரது குடும்ப வாரிசுகளின் வீடும் புறம்போக்கு நிலத்தில் இருந்து வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்து, இவர்கள் அன்றும் இன்றும் என்றும் அரசு சொத்தை ஆடயப் போடுபவர்கள் தான் என்று பொது மக்களை பேச வைத்துள்ளது.
ஈரோட்டில் நகராட்சி தலைவராக இருக்கும் அளவுக்கு சமூகத்தில் பெரிய செல்வந்தராக வலம் வந்த, ஈ.வே.ரா., வணிக ரீதியில் குடியரசு பத்திரிகை அலுவலகம் துவங்க யாரிடம் இருந்து, எந்த வகையில் புறம்போக்கு நிலத்தை பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பாளர் என்ற அடிப்படையில் தான் பட்டா வாங்குவதற்கு இளங்கோவன் இத்தனை முயற்சி மேற்கொண்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.