டெல்லி- மீரட் வழித்தடத்தில் இந்தியாவின் அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை இன்று (அக்டோபர் 20) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் 180 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியது என்பதால் பயண நேரம் வெகுவாக குறையும்.
நமது நாட்டின் ரயில் போக்குவரத்தை நவீனமாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக அதிவேக ரயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. இந்த ரயில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும்.
இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் (நமோ) சேவையை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 20) துவக்கி வைத்தார். இந்த ரயில்களுக்கு ‘நமோ பாரத்’ என பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் ரயில் சேவை, என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பகுதிகள் முழுதும் உள்ளடக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக, டெல்லி, காஜியாபாத், மீரட் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த பிராந்திய விரைவு போக்குவரத்து சேவை முடிவு செய்யப்பட்டுள்ளது.