ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய கருக்கா வினோத்தை இதற்கு முன் ஜாமீனில் திமுக நிர்வாகிகள் எடுத்துள்ளனர். இதற்கான ஆதாரத்தை தமிழக பாஜக ஆதாரத்துடன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை, கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் வெடிகுண்டை தூக்கி ஆளுநர் மாளிகையில் வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றார். அவரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
இது சம்பந்தமாக ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்த போலீஸ் தரப்பு சொல்வதாக கூறப்படுவதாவது: தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அது மட்டுமின்றி நீட் தேர்வு எதிர்ப்புக்கு ஆதரவாகவும் வெடிகுண்டை வீசியதாகவும் தெரிவித்தனர் போலீசார். இந்த விசாரணையில் துளியும் நம்பிக்கை இல்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் குறித்த ஆளுநர் மாளிகையின் புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை திமுக அரசு மீது குற்றம் சாட்டியது.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக அமைச்சர் ரகுபதி, பாஜக மீது பழியை சுமத்த முற்பட்டார். அதாவது கருக்கா வினோத்தை பாஜக நிர்வாகிதான் ஜாமீனில் எடுத்தார் என்ற பொய்யான தகவலை தெரிவித்தார்.
இந்த பொய் தகவலை தமிழக பாஜக ஆதாரத்துடன் மறுத்தது மட்டுமின்றி, கருக்கா வினோத்தை ஜாமீனில் இதற்கு முன்னர் எடுத்தது திமுகதான் எனக் கூறி அதற்கான புகைப்படங்களையும் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ்தளத்தில், ‘‘ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கி பாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது.
பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார். அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுகவினர் ஜாமினில் எடுத்துள்ளது இதில் திமுகவினர் சம்பந்தப் பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் பெட்ரோல் குண்டு வீசியவரை குறித்து என்.ஐ.ஏ., விசாரணை நடத்தினால் இந்த சதிச் செயலுக்கு பின்னால் இருக்கும் திமுக மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் சிக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தொடர்ந்து திமுகவினர் மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.