பிரதமர் மோடியால் பெண்கள் அதிகம் தொழில் முனைவோர்களாக உள்ளனர்: அண்ணாமலை பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்தில் பலன் பெற்றவர்களில் 43 சதவீதம் பேர் பெண் தொழில் முனைவோர்கள்தான். இதுதான் மகளிர் முன்னேற்றம், மேம்பாடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நேற்று (அக்டோபர் 27) என் மண் என் மக்கள் நடைபயணத்தை மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலை முழுவதும் பொதுமக்கள் திரண்டு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடைபயணத்தில் மத்திய அரசு செய்த நலத்திட்ட உதவிகள், திமுக செய்த துரோகங்கள் குறித்து மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

இன்றைய (அக்டோபர் 27) என் மண் என் மக்கள் பயணம், வீரத்துக்குப் பெயர்பெற்ற தீரன் சின்னமலை, ஆங்கிலேயர்கள் வஞ்சத்தால் தூக்கிலிடப்பட்ட, வீரம் விதைத்த மண்ணான சங்ககிரியில், பெரும் மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது. சங்கு வடிவில் இருக்கும் மலை அமைந்திருப்பதால் சங்க கிரி என்ற பெயர் பெற்றது. இங்கிருக்கும் சங்ககிரி கோட்டை, தமிழகத்தின் உயரமான மலைக்கோட்டை ஆகும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோட்டை, ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சுற்றுலாத் தலமாக உயர்ந்திருக்க வேண்டும். தீரன் சின்னமலை வீர வரலாறும், சங்ககிரி கோட்டையின் வரலாறும் நம் குழந்தைகள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இத்தனை ஆண்டுகளாக சங்ககிரி கோட்டையை, சுற்றுலாத் தலம் ஆக்காமல் புறக்கணித்தே வந்திருக்கிறார்கள்.

சங்ககிரி மலை உச்சியில் இருக்கும் சென்னகேசவ பெருமாள் கோவில், மலை அடிவாரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவில், வி.என்.பாளையம் வசந்த வல்லப பெருமாள் கோவில் ஆகிய மூன்று கோவில்களுக்கும் நூறு ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் நடக்காமல் இருப்பதால், உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இரண்டு கோவில்கள் இருப்பதால், தமிழக பாஜக, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம் பேசி, தொல்லியல் துறை அனுமதி பெற்று, கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளும்.

தமிழகம் முழுவதும், முறைகேடாகக் கனிம வளங்கள் கடத்தப்படுவது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. சங்ககிரியும் விதிவிலக்கல்ல. 20 ஆண்டுகளில் சுமார் ₹1.1 லட்சம் கோடி அளவுக்கு கனிமவள முறைகேடு நடந்திருப்பதாக சகாயம் அவர்கள் அறிக்கை சொன்னது.  TAMIN அரசு நிறுவனமும் இந்த முறைகேடுகளுக்கு துணை போனதாகவும் சகாயம் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் என்ன ஆனது என்பது மர்மமாக உள்ளது. அமைச்சர் பொன்முடி தான் 2007 முதல் 2011 வரை தமிழக அரசின் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தார். அவர் மீதும் செம்மண் கடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டிருந்த சங்ககிரி பகுதி, இப்போது லாரி பாடி பில்டிங் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்லாயிரக்கணக்கான லாரிகளுடன் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக லாரி உரிமையாளர்கள் கொண்ட தொழில் நடைபெறுகிறது. 70% டாரஸ் வாகனங்கள், சங்ககிரி பகுதியில் தான் இருக்கின்றன. ஆட்சிக்கு வந்தால் டீசல் விலையை குறைப்போம் என பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை டீசல் விலையைக் குறைக்கவில்லை. டீசல் விலையைக் குறைக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், திமுக அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. லாரிகளுக்கான பசுமை வரி, காலாண்டு வரிகள் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.

மகளிர் உரிமைத் தொகை என்று, கொஞ்சம் பேருக்கு 1000 ரூபாய் தருவது போல இந்தப் பக்கம் தந்துவிட்டு, அந்தப் பக்கம், பால் விலையை 25 சதவீதம் ஏற்றிவிட்டார்கள். ஆவின் 1 லிட்டர் நெய் விலை 515 ரூபாயாக இருந்தது இன்று 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மின்சார கட்டணம் 15 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சொத்துவரி 50 சதவீத உயர்வு. பத்திரப்பதிவு கட்டணம் 60 முதல் 500 சதவீதம் உயர்வு. குடிநீர் வரி உயர்வு. மக்கள் அனைவருக்கும் விலை உயர்வு பொருந்தும். ஆனால், உரிமைத் தொகை வழங்க மட்டும் தகுதி வேண்டுமாம். திமுகவில் உறுப்பினராக இருப்பதுதான் தகுதியா?

2021 தேர்தலின்போது, திமுக கொடுத்த 500க்கும் அதிகமான தேர்தல் வாக்குறுதிகளில், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, முதலமைச்சர் ஸ்டாலின் பொய் கூறியிருக்கிறார். உதாரணமாக சங்ககிரியில் ஆட்டோ நகரம் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. இப்படி ஒவ்வொரு ஊருக்கும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல், எப்படி 99% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூசாமல் பொய் சொல்லித் திரிகிறார் ஸ்டாலின்?

வருடம் ஒரு முறை திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்பார்கள். மத்திய அமைச்சர்கள் பதில் சொல்லும்போது, அவைக்குச் செல்லமாட்டார்கள். சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யத் தேவையான 446 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தான் வழங்க வேண்டும். திமுக அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது. இதே போலதான், சென்னை பெங்களூரு விரைவு சாலை திட்டம். நிலம் கையகப்படுத்துவதில், தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதால், தமிழக எல்லைக்குள் சாலை அமைக்கும் பணி தாமதமாவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்தார். உரிய நேரத்தில் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், பின்னர் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று மக்களை ஏமாற்றுவதுதான் திமுகவின் வேலை.

மத்திய அரசின் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்தில் பலன்பெற்றவர்களில் 43 சதவீதம் பேர் பெண் தொழில் முனைவோர்கள்தான். இதுதான் மகளிர் முன்னேற்றம், மேம்பாடு. ஒரு சிலருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, மற்றவர்களைப் புறக்கணிப்பது அல்ல. சேலம் மாவட்டத்தில், 63,828 பேருக்கு பிரதமரின் வீடு திட்டத்தின் மூலம் வீடு, 4,49,997 வீடுகளுக்கு குழாய்க் குடிநீர், 3,01,532  இலவச கழிப்பறைகள், 1,78,408 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,20,539 பேருக்கு பிரதமரின் மருத்துவக் காப்பீடு, 1,90,151 விவசாயிகளுக்கு வருடம் ரூபாய் 6,000, மேலும், ரூபாய் 6,682 கோடி முத்ரா கடனுதவி என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆனால் திமுக, மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வரும் பணிகளை எல்லாம் தாமதப்படுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுகவை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top