நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அமைந்துள்ள சேந்தமங்கலம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்றது. அங்குள்ள பழங்குடியின மக்களின் நலனை கருத்தில் கொண்டு பாஜக ஆட்சி தமிழகத்தில் அமையும்போது ஏகலைவா பள்ளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் எனக் கூறினார்.
என் மண் என் மக்கள் பயணம் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
இன்றைய என் மண் என் மக்கள் பயணம், மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் சித்தர்கள் உறையும் கொல்லிமலை அமைந்துள்ள சேந்தமங்கலம் தொகுதியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மீது பேரன்பு கொண்ட மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது. காவல் தெய்வம் எட்டுக்கை அம்மன் கொல்லிப்பாவை அருள்பாலிக்கும் கொல்லிமலை மீது அப்பர் மற்றும் சம்பந்தரால் பாடல் பெற்ற 2000 ஆண்டுகள் பழமை பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலைத் தரிசிக்க உலகின் பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வருகின்றனர்.
கடை ஏழு வள்ளல்கள் ஒருவரான வல்வில் ஓரி கொல்லி மலையை ஆண்ட மன்னர். பழம்பெரும் சங்க நூலான புறநானூறில், வல்வில் ஓரியின் வில்லில் இருந்து புறப்பட்ட ஒரு அம்பு, யானையை வீழ்த்தி, பெரிய வாயுடைய புலியைக் கொன்று, கொம்புகளையுடைய புள்ளி மான் உடலில் பாய்ந்து, உரல் போன்ற தலையுடைய பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடம்பில் பாய்ந்து நின்றது என்று வல்வில் ஓரியின் வில் வித்தைத் திறனைப் பற்றி பாடல் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள இரண்டு பழங்குடியினருக்கான தொகுதிகளில் ஒன்று சேந்தமங்கலம். எளிய அலுவலக உதவியாளராக தனது வாழ்க்கையைத் துவங்கி, நமது நாட்டின் முதல் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஜனாதிபதியாக உயர்ந்த திருமதி திரௌபதி முர்மு அவர்கள், தனது ஏழ்மையை கல்வி மற்றும் அரசியல் அங்கீகாரம் என்ற நெருப்பால் பொசுக்கி தனது வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டவர். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த திருமதி திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி, உண்மையான சமூக நீதி நாயகனாக இருப்பவர் நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதால் மட்டுமே மக்களாட்சி முழுமை பெறுகிறது.
நாங்கள் ஆரியத்துக்கு தான் எதிரி ஆன்மீகத்துக்கு இல்லை என்று சொல்லும் திமுக தலைவர் ஸ்டாலின், ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியின பெண்மணியான திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு வாக்களிக்காமல், இவர் எதிர்க்கும் ஆரியரான யஷ்வந்த் சின்ஹா அவர்களுக்கு வாக்களித்தார். இதுதான் திமுகவின் சமூக நீதி. நமது பாரதப் பிரதமரின் 78 அமைச்சர்களில் 11 பேர் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஸ்டாலின் அவர்களின் 34 அமைச்சர்களில் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை.
அனைத்து சட்ட மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னரே சட்டம் ஆகும். அத்தகைய உயர்ந்த பதவி வகிக்கும் ஜனாதிபதி அவர்களை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ய ஏன் அழைக்கவில்லை என்று கேட்கிறார்கள் திமுக அறிவிலிகள். 2010ஆம் ஆண்டு மகளிர் மசோதாவை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த போது, அப்போதைய பெண் ஜனாதிபதியான பிரதிபா பாட்டீல் அவர்களை காங்கிரஸ் மற்றும் திமுக அழைக்கவில்லை. அன்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கட்சிகளே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கவில்லை. ஆனால், எதிர்க் கட்சியாக இருந்த பாஜக ஆதரித்தது. இன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை பாஜக தான் நிறைவேற்றியுள்ளது. 2010 ஆம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி இன்று இ.ண்.டி. கூட்டணியில் தான் இருக்கிறது. அவர்களை அழைத்து மகளிர் உரிமை மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்திற்கு, இந்திய அளவில் 2021- 2026 ஆம் ஆண்டு வரை ஒதுக்கியுள்ள நிதி 26,135.46 கோடி ரூபாய். தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மலைவாழ் பழங்குடி மக்கள் உள்ளனர்.
பழங்குடியினர் நலனுக்காக, 2018 முதல் 2021ஆம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 1425.18 கோடி ரூபாய். பத்தாம் வகுப்பு வரையிலான தமிழகப் பழங்குடியினர் மாணவர்களுக்கு, 2014 முதல் 2022 வரை, 8 ஆண்டுகளில் வழங்கப்பட்ட நிதி: 19.76 கோடி ரூபாய். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் தமிழகப் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி: 226 கோடி ரூபாய். பிரதம மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம திட்டம் மூலமாக, கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதி 2.85 கோடி ரூபாய்.
வனஉற்பத்தி விற்பனை மையங்கள் என்ற திட்டத்தின் மூலமாக மலை கிராமங்களில் செய்யப்படும் உற்பத்தியை விற்பனை செய்ய மத்திய அரசு வழங்கும் ஒரு வாய்ப்பு இது. 15 சுயஉதவி குழு இணைத்து ஒவ்வொரு விற்பனை மையத்தை நடத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். கடந்த 3 ஆண்டுகளில் 342 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்துள்ளது. இந்தியாவில் 3225 வனஉற்பத்தி விற்பனை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் வெறும் 8 மையங்களே உள்ளது. மலைவாழ் மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்பதனால் அவர்களை வஞ்சிக்கிறது தமிழக அரசு.
நாடு முழுவதும் 694 ஏகலைவா பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,15,169 பழங்குடியின மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்திற்கு 8 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் வழங்கியுள்ளது நமது மத்திய அரசு. அதில் 2867 மலைவாழ் பழங்குடி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 8.67 கோடி ரூபாய் நிதி, இந்தப் பள்ளிகளுக்கு நமது மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏகலைவா பள்ளியில் பயின்ற 15 மாணவர்கள் இந்த வருடம் கடினமான நுழைவு தேர்வுகளில் ஒன்றான IIT – JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிராமப்புற மாணவர்கள், அனைத்து கல்வி வசதிகள், பேருந்து கட்டணம் என்று பயன்பெற மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தைக்கு நமது மத்திய அரசு ஒரு ஆண்டுக்கு 85,000 ரூபாய் செலவு செய்கிறது. இந்தியாவில் சுமார் 625 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட இல்லை. இந்திய அளவில், 2,78,356 மாணவ, மாணவிகள் நவோதயா பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதில் 89 சதவீதம் 2,30,817 பேர் கிராமப்புற மாணவ, மாணவிகள். 25.38% மாணவ மாணவியர்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நவோதயா பள்ளிகள் மும்மொழி கொள்கையை கடைபிடிக்கிறது என்ற ஒரே அரசியல் காரணத்தினால் தமிழக அரசு நவோதயா பள்ளிகளைப் புறக்கணித்து வருகிறது. கேரளாவில் 14, கர்நாடகாவில் 28, ஆந்திராவில் 15, தெலுங்கானாவில் 9 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மலையாளம், கன்னடம், தெலுங்கு அழிந்துவிட்டதா? நவோதயா பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அவரவர் தாய் மொழியே பயிற்று மொழியாக உள்ளது. இது எப்படி ஹிந்தியை திணிக்கும் பள்ளி என்று கூறுகிறார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு நவோதயா பள்ளிகள் கொண்டு வரப்படும். பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
நாடு முழுவதும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கு நமது மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் வழங்கிய நிதி 89000 கோடி ரூபாய். 10 ஆண்டு காலம் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது பழங்குடியினர் மேம்பாட்டிற்கு வழங்கப்பட்ட நிதி வெறும் 21000 கோடி ரூபாய். தமிழகத்திற்கு நமது பாரதப் பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று நாமக்கலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 21,947 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலம் வீடு, 3,19,462 வீடுகளில் குழாய்க் குடிநீர் வசதி, 1,45,525 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,17,778 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,21,516 பேருக்கு பிரதமரின் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டம், 85,505 விவசாயிகளுக்கு, பிரதமரின் விவசாய நலநிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், நாமக்கல் மாவட்டத்திற்கு 3422 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி. இவை அனைத்தும் மத்திய அரசு நாமக்கல் மாவட்டத்துக்கு வழங்கிய நலத் திட்டங்கள்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், போலி சமூக நீதி வேஷம் போடும் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நலத் திட்டங்கள் தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.