பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினர்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்கள் மற்றும் தமிழக பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.
தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். ஏழை எளிய மக்களுக்காக தமது சொத்துக்களை அனைத்தும் வழங்கிய வள்ளல். அனைத்து சமுதாய மக்களும் ஆலயத்துக்குள் செல்ல, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தவர். தென்னகத்தின் போஸ் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.