கள் விற்பனை செய்தால், விவசாயிகளுக்குத் தான் வருமானம். திமுகவினருக்கு பணம் சம்பாதிக்க முடியாது. பனை மரத்தால் எப்படி ஒரு லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டலாம் என வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். ஆனால் சாராய ஆலைகள் நடத்தும் தீய சக்தி திமுக அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
என் மண் என் மக்கள் பயணம் தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
நேற்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், சுயம்பாகத் தோன்றி மக்களைக் காத்து வரும் கொங்கு மண்டலத்தில் தனிச்சிறப்பு பெற்ற நித்ய சுமங்கலி அம்மன் அருள் வழங்கும் ராசிபுரம் நகரில், வெகு சிறப்பாக நடைபெற்றது. ராசிபுரம் நகரம், நெய், பட்டு மற்றும் ஜவ்வரிசிக்குப் புகழ் பெற்றது. நெய் ஒரு நாளைக்கு 300 கிலோவில் இருந்து 500 கிலோ வரை இங்கு தயாரிக்கப்படுகிறது. ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை தமிழக பாஜக முன்னெடுத்துச் செல்லும்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், பனை வெல்லம் மற்றும் பனை பொருட்களை நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்வோம் என்று திமுக வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்தபின் வெறும் அறிவிப்போடு நிறுத்திக் கொண்டது. ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டிபுதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கரையான்தின்னிபுதூர் பகுதியில் பனைமரத் தொழில் அழிந்து வருகிறது. ஆனால் இன்று வரை பனைமரங்களை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 03.06.2009 அன்று, அன்றைய திமுக அரசு அமைத்த நீதிபதி கு.ப.சிவசுப்பிரமணியம் தலைமையிலான குழுவின் அறிக்கையில், ‘கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருள்களை மூலப்பொருள்களாக வைத்து தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களை அனுமதிக்கும்போது குறைந்த பாதிப்பு கொண்ட கள்ளைத் தடை செய்வதை நியாயப்படுத்த முடியாது. நீண்ட நாட்களுக்கு கள் மீதான தடையைத் தொடர்ந்து நீட்டிப்பது நியாயமல்ல’ என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கையை திமுக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், கள் விற்பனை செய்தால், விவசாயிகளுக்குத் தான் வருமானம். திமுகவினருக்கு பணம் சம்பாதிக்க முடியாது. பனை மரத்தால் எப்படி ரூ 1 லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டலாம் என வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். ஆனால் சாராய ஆலைகள் நடத்தும் தீய சக்தி திமுக அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு திமுக செய்த பங்களிப்பு பூங்காவுக்கு செம்மொழி பூங்கா என்று பெயர் வைப்பது மட்டும் தான். திமுகவினர் வசூல் செய்வதற்காக மட்டுமே இந்த வருடம் பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது தான் ராசிபுரம் செம்மொழி பூங்கா. திமுக நகர்மன்றத் தலைவர் கவிதா சங்கர் சொல்லி, ராசிபுரம் திமுக நிர்வாகி புஷ்பா, சிறுவர்களுக்கு 10 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறார். டாஸ்மாக்கிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல். பொதுமக்கள் வரிப்பணத்தில் கட்டிய பூங்காவிலும் 10 ரூபாய் வசூல். உழைக்காமல் பத்து ரூபாய் வசூல் செய்தே வாழ்பவர்கள் தான் திமுகவினர்.
திமுக அரசு, விவசாய நிலத்தை ஆக்கிரமித்துத்தான் சிப்காட் அமைப்பார்கள். அதே போல தற்போது, தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்காக ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமிழக பாஜக துணை நிற்கும். இந்தத் தொழில்நுட்ப பூங்காவை வேறு இடத்தில் அமைக்கவேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளில், தமிழக கிராமங்களுக்குச் சாலை அமைக்க நமது மத்திய அரசு 3376 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுத்த அறிக்கையின்படி, தமிழகத்தில் சாலை இணைப்பு இல்லாத பகுதிகளே இல்லை என்று முற்றிலும் பொய்யான தகவல் கொடுத்துள்ளது. ராசிபுரம் பகுதியை அடுத்த போதமலை மலைப்பகுதியில் கீழூர் மேலூர் கிராமத்திற்கு, பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்ற திட்டத்தின் படி, 2016ஆம் ஆண்டு மின்சாரம் வழங்கப்பட்டது. சமீபத்தில் அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி பழுதாகியுள்ளது. சாலை வசதி இல்லாததால் அந்த 600 கிலோ எடையுள்ள மின்மாற்றியை கிராம மக்கள் தோளில் தூக்கிக் கொண்டு வந்து பழுது பார்த்துள்ளனர். சாலை அமைக்க மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே போனது? சாலை அமைக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதிவேந்தன்?
மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்பு வனத்துறையில் லஞ்சம் பலமடங்கு உயர்ந்துள்ளது. தடையில்லா சான்றிதழ் வழங்க ஏக்கருக்கு இரண்டு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியுள்ளார்கள். 120 வனக்காவலர் பணியிடமாற்றத்திற்கு மட்டும் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்.
தமிழகத்திற்கு நமது பாரதப் பிரதமர் வழங்கிய 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று நாமக்கலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் மற்றும் 8 பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தும் குடிநீர் திட்டம் நமது மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 854 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்ருத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இதுவரை 4288 கோடி ரூபாய் நமது மத்திய அரசு வழங்கியுள்ளது. 21,947 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,19,462 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,45,525 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,17,778 பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், 1,21,516 பேருக்கு பிரதமரின் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டம், 85,505 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், நாமக்கல் மாவட்டத்திற்கு 3422 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் மக்களுக்கான நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து பிரதமர் கரங்களை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.